சேதன பசளை தொடர்பில் ஒரு சில வைத்தியர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தவறாக வழிநடத்தாமல் இருந்திருந்தால் அவர் இன்றும் பதவியில் இருந்திருப்பார்.
இரசாயன உரம் தடை செய்யப்பட்டதால் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து நாட்டில் பிரச்சினைகள் தீவிரமடைந்தன என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயத்துறை,கடற்றொழில் மற்றும் நீர்ப்பாசன துறை அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பாவனை மீது தடை விதிக்கப்பட்டதால் நாட்டின் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்தது.
என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.இரசாயன உரம் இறக்குமதி மீண்டும் அமுல்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் அரிசி உட்பட தேசிய உற்பத்தி உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன ஆனால் தற்போது பாரிய நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரசி உட்பட தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்ய கூடிய அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
சேதன பசளை திட்டம் தொடர்பில் ஒரு சில வைத்தியர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தவறாக வழி நடத்தினார்கள்.
உர பற்றாக்குறையை தொடர்ந்து நாட்டில் பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றிணைந்த வகையில் தீவிரமடைந்தன.கோட்டாபய ராஜபக்ஷ சேதன பசளை திட்டத்தை அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால் அவர் இன்றும் பதவியில் வகித்திருப்பார்.
குறுகிய காலத்தில் விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது,விவசாயத்துறை தன்னிறைவடைந்தால் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்ளலாம்.ஆகவே இரசாயன உர பயன்பாட்டை விரிவுபடுத்த விவசாயத்துறை அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

