தனியார் நிறுவன அதிகாரியிடம் பெண் குரலில் பேசி திருமண ஆசைகாட்டி, நூதன முறையில் ரூ.20.90 லட்சம் மோசடி செய்ததாக மருத்துவ விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புழுதிவாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரகுராம் (39). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மூத்த செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த மே மாதம் ரகுராமின் தந்தை பாலசுப்பிரமணியன் செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் தனதுபெயர் கல்யாணராமன் என்றும், சேலத்தில் உள்ள தனது அண்ணனின் மகள் ஐஸ்வர்யா என்பருக்கு மாப்பிள்ளை தேடி வருவதாகவும், மகனின் விவரங்களை அனுப்புமாறும் கூறியுள்ளார்.
இதை நம்பிய ரகுராமின் தந்தைபாலசுப்பிரமணியன், தனது மகனின்தகவல்களை அனுப்பியுள்ளார். அதன்பிறகு ரகுராமுடன் ஐஸ்வர்யா என்பவர் செல்போனில் தொடர்புகொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளார். ஐஸ்வர்யாவின் பேச்சில் ரகுராம் மயங்கி உள்ளார்.

