உரிய நேரத்தில் உரத்தை இறக்குமதி செய்வதில் அரசாங்கமானது அசமந்தம் அடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எமக்கு தேவையான அரிசியை நாமே உற்பத்தி செய்வோம். எனவே அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
வர்த்தக அமைச்சர் அரிசியை இறக்குமதி செய்யும்போது விவசாய அமைச்சையும் அதில் தொடர்புப்படுத்திக்கொள்ளும் ஒரு முறைமை ஆரம்பத்தில் இருந்தது.
ஏழு இலட்சம் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு இருப்பது விவசாய அமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை.
விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்துகொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர்.
ஒரு பக்கம் செலவீனம் அதிகரித்துள்ளது மறுபக்கம் வருமானம் குறைந்துள்ளது.
அரசாங்கம் இதற்காக எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றது என்றே நான் கேட்கின்றேன்.
விவசாயிகள் பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதற்கெதிராக எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றது.
போதிய உரம் இல்லாததே இதற்கு அடிப்படை காரணமாகும்.
நாடு சுதந்திரமடையும்போது நாட்டுக்கு தேவையான அரிசியில் 35 சதவீதத்தை நாம் உற்பத்தி செய்தோம்.
எனினும் அதன் பின்னர் வந்த அரச தலைவர்கள் அந்த சதவீதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் என்ற நிலைமைக்கு கொண்டுவந்தனர்.
கடந்த கால அரசாங்கத்தின் தவறான தீர்மானம் காரணமாக நூற்றுக்கு 45 சதவீதமாக அந்த உற்பத்தி குறைவடைந்தது.
விவசாயிகளுக்கு தேவையான உரம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, யூ.எஸ்.எய்ட் ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்கள் உரத்தை கொண்டுவருவதற்காக பணத்தை வழங்கியுள்ளனர்.
எனினும் அரசாங்கமானது உரிய நேரத்துக்கு உரத்தை கொண்டுவருவதில் அசமந்தம் அடைந்துள்ளது.
டி.எஸ்.பி என்ற உரமானது கடந்த இரண்டு வருடங்களாக இறக்குமதி செய்யப்படவில்லை.
யூரியா உரம் உரிய நேரத்துக்கு வழங்கப்படவில்லை. உரமானது உரிய நேரத்துக்கு வழங்கப்படவில்லையாயின் விவசாயிகள் எவ்வாறு விவசாயத்தை முன்னெடுப்பார்கள்.
உரத்தை ஏற்றிக்கொண்டு கப்பல் துறைமுகத்தை வந்தடைந்தால் அதனை வரவேற்பதற்காக விவசாய அமைச்சர்கள் துறைமுகத்துக்கு செல்கின்றனர்.
இது உண்மையில் வெட்கக்கேடான விடயமாகும்.

