அரிசிக்கு விற்பனை விலையை அதிகரித்த அரசு நெல்லிற்கான கொள்விலையை அதிகரிக்காது விவசாயிகளை ஏமாற்றுவதாக கிளிநொச்சி மாவட்ட இரணைமடு விவசாயிகள் சம்மேளனச் செயலாளர் இ.சிவமோகன் தெரிவித்தார்.இது குறித்து சம்மேளனச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் நிலவிய வறட்சியின் காரணமாக விவசாயம் அதிகமாக பாதித்ததோடு எஞ்சிய வயல்களும் விளைச்சர் குறைந்த்தாகவே கானப்படுகின்றது. இவ்வாறான வறட்சி மற்றும் நெல் தட்டுப்பாடுகளினால் அரிசிக்கும் தட்டுப்பாடு நிலவிய சமயம் 70 ரூபா விற்ற சிவப்பரிசிகளின் நிர்ணய விலை 80 ரூபாவாகவும் 80 ரூபா விற்ற சம்பா 90 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இவ்வாறு அரிசிகளிற்கான விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க முன்பு சிவப்பு நெல்லின் பொள்விலை 38 ரூபாவாகவும் சம்பா நெல்லின் கொள்விலை 42 ரூபாவாகவுமே காணப்பட்டது. இருப்பினும் அரிசிக்கு 10 ரூபா அதிகரித்து விலை நிர்ணயம் செய்த இந்த அரசு நெல்லின் விலை அதிகரிப்பை பற்றி சிந்திக்காது விவசாயிகளை கைவிட்டுள்ளதாகவே நாம் கருதுகின்றோம்.
காலநிலை கைவிட்டதனால் பாதிப்படைந்த விவசாயியை ஆட்சியாளர்களும் கைவிடும் நிலமையே கானப்படுகின்றது. ஆனால் வர்த்தகர்களின் சொல்லிற்காக ஆய்வு மேற்கொண்டு அரிசியின் நிர்ணய விலையினை மட்டும் தற்போது மாற்றம் செய்துள்ளனர். இதன் மூலமும் உற்பத்தியாளன் தொடர்ந்தும் பாதிப்படைய மில் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களிற்குரிய கரிசணை மேற்கொண்டது போன்று விவசாயிகளின் விடயத்திலும் கரிசணை கொண்டு நெல்லின் கொள்விலையில் மாற்றம் செய்யப்படவேண்டும்.
அவ்வாறு மாற்றம் செய்வதன் மூலமே அரசு மற்றும் வர்த்தகர்கள் , விவசாயிகள் ஆகியோருடன் பாவனையாளர்களிற்குமிடையில் சுமூகமான உறவு நிலை பேணமுடியும்.என்றார்.

