இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக தொடரும் போராட்டம்

97 0

யாழ். மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி. தென்மேற்கு பிரதேச சபையினரால் கல்லுண்டாய் வைரவர் ஆலயத்துக்கு முன்பாக இன்றும்   மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

இந்த போராட்டம் நேற்றுமுன்தினம் (நவ. 30) புதன்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், மூன்றாவது நாளான இன்றும் இடம்பெற்று வருகிறது.

போராட்டம் நடந்த முதல் இரண்டு நாட்களான நேற்றும் நேற்று முன்தினமும் யாழ். மாநகர சபையினர் வழமையாக குப்பை கொட்டும் கல்லுண்டாய் பகுதிக்கு குப்பை கொட்டுவதற்காக வந்தவேளை, குப்பைகளை ஏற்றிவந்த 8 வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.

அத்துடன் ஏனைய வாகனங்கள் திரும்பிச் சென்றுள்ளன. எனினும், இன்றைய தினம் இதுவரை எந்த குப்பை ஏற்றும் வாகனங்களும் வரவில்லை.

நேற்று யாழ். மாநகர சபையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில், குப்பை வண்டிகளை வழிமறித்து போராட்டம் நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இவ்வாறான சூழலிலேயே மூன்றாவது நாளான இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப்போராட்டத்தில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.