ஊழல், மோசடிகள் சட்ட மூலத்துக்கு ஆளும் கட்சி உள்ளிட்ட அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்

158 0

நாடு பாரிய பொருளாதார நெருடிக்கடிக்கும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் சவால்களுக்கும் ஊழல் மற்றும் மோசடிகள் பிரதான காரணமாகும்.

இந்நிலையில் அரச நிதியினை கையாடியவர்கள் இனங்காண படவேண்டும். அவர்களிடமிருந்து கையாடப்பட்ட நிதி மீளவும் அரசுடமையாக்க பட வேண்டும் என்பதற்காக தற்போது ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் புதிய சட்டமூலத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் நாம் சமர்ப்பித்துள்ளோம்.

குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை (நவ.30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் டொலர் இல்லை, அந்நிய செலாவணி வீழ்ச்சிஅடைந்துள்ளது, அரசாங்கத்திடம் நிதியின்மை காரணமாக நாடு இன்று வங்குரோத்து அடைந்துள்ளது.

கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் காரணமாகவே நாம் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளோம். நாட்டில் ஆட்சி செய்த பல்வேறு தலைவர்களுக்கு எதிராக கடுமையான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் ஊழல் மோசடிகளை இல்லாது செய்தமையாலேயே இன்று அந்த நாடுகள் அபிவிருத்தியடைய காரணம்  ஆனால் இன்று மக்களாணையின்றி பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி பழைய விடயங்களை மறந்து புதிய அரசியல் மாற்றம் ஒன்றை நோக்கி பயணிப்போம் என்கிறார்.

இங்கு பழைய விடயங்கள் மற்றும் மறந்து பயணிபோம் என்பதில்   பண்டோரா பத்திரிகையில் குறிப்பிட்ட வெளிநாட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள நாட்டிற்கு சொந்தமான பல கோடி ரூபா நிதி, சீனி கொடுக்கல் வாங்கலின் போது மேற்கொள்ளப்பட்ட மோசடி, மத்திய வங்கி கொள்ளையை  இவ்வாறான விடயங்களும் உள்ளடங்கியுள்ளன.

மேலும், நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் ஊழல் மற்றும் மோடிகளை கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் வினைத்திறன் அல்லது எந்தவொரு பயனும் இல்லை என்று கூறுகிறார். அதாவது நாட்டின் நிதியை மோசடிசெய்தவர்கள்  மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு

எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என்பதையே அவர் கூறுகிறார். நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தோம். இருப்பினும் ராஜபக்ச அரசாங்கம் அவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்தது.

தங்களுக்கு ஏற்றாற் போல் சட்டங்களை மாற்றி அமைத்தார்கள். இந்நிலையில் இந்த சட்டமூலத்தை மீளவும் நடைமுறைப்படுத்தி மோசடிகாரர்களுக்கு தண்டனை வழங்கி அவர்கள் எந்தவிதத்திலும்  தப்பித்து கொள்வதற்கு முடியாத வண்ணம் சட்டத்தை நடைமுறைப்படுத்த குறித்த ஊழல் மற்றும் மோடிகள் சட்டமூலத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பித்துள்ளோம்.மேலும் குறித்த சட்ட மூலத்திற்கு ஆளும் கட்சியின் ஆதரவு கிடைக்கும்  என்று நாம் எதிர்பார்க்கிறோம். திருடப்பட்ட நிதி மீளவும் அரசுடமையாக்கபட வேண்டும் என்றார்.