உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வு-2022 பெல்சியம்.

697 0

பெரும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வு பெல்சியம் – 2022
பெல்சியம் அன்ற்வெப்பனில் அமைந்துள்ள மாவீரர் நினைவுக் கல்லறையில் நினைவுச்சுடர் ஏற்றி எமது தேசத்திற்காக ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து மிகச் சிறப்பாக வணக்க நிகழ்விற்காக அமைக்கப்பட்ட மாவீரர் மண்டபத்தில் பொதுச்சுடரேற்றி எழுச்சி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

பொதுச்சுடரினை இரண்டு மாவீரரின் சகோதரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை பெல்சியம் நாட்டின் துணைப் பொறுப்பாளர் திரு . மாசிலான் அமலதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார் . தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாளன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி திரையில் ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் – 2022 கொள்கை வகுப்பு அறிக்கை ஒலி வடிவில் ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து 13.35 மணிக்கு மணிஒலி எழுப்பப்பட்டு தொடர்ந்து துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பியவண்ணம் இருக்க ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

ஈகைச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தாயார் திருமதி சந்திரவதனா இரவீந்திரன் அவர்கள் ஏற்றி வைத்த அதேநேரத்தில் அனைத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு வருகை தந்த மாவீரர்களின் பெற்றோர்கள், உடன் பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கனத்த இதயத்துடன் ஈகைச்சுடரேற்றி கண்ணீருடன் மலர் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து எழுச்சி நிகழ்வுகள் இடம் பெற்றன. இத்தாலி நாட்டின் கீழ்பிராந்திய முன்னைய நாள் பொறுப்பாளரும் அனைத்துலகத் தொடர்பக கலை பண்பாட்டுக்கழக இணைப்பொறுப்பாளருமான திரு . யமால் அவர்களின் சிறப்புரையும் அதனைத் தொடர்ந்து எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள், நாடகம் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்று இறுதியாக தமிழீழத் தேசியக் கொடி கையேந்தலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்…..’ என்ற எழுச்சிப் பாடல் இசைக்கப்பட்டு தமிழரின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தது.