அனைத்துக்கட்சிகளையும் அரவணைத்துச் செல்வதற்கு ஒருங்கிணைப்பு குழுவில் முடிவு

120 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தவிர்த்து, வலுவாக ஒன்றுபடுவதோடு, தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள தேசியக் கட்சிகளையும் அரவணைத்து செல்வதெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், சனிக்கிழமை (26) முற்பகல் 11மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் அவருடைய தலைமையில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம், கோவிந்தன் கருணாகரம், பேச்சாளர் சுரேன்குருசுவாமி, புளொட் சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது, கூட்டமைப்பின் தலைவர், சம்பந்தன், தேசியப் பிரச்சினை விவகாரம் சம்பந்தமாக வெள்ளிக்கிழமை (25)தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளமையை வரவேற்று கருத்துக்களை பரிமாற்றியதோடு, தொடர்ச்சியாக அக்கருமத்தினை நீடிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து, கூட்டமைப்புக்குள் காணப்படும் பங்காளிக்கட்சிகளுக்குள் உள்ள கருத்து முரண்பாடுகள் மற்றும் உட்பூசல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து, எதிர்வரும் காலத்தில் உள்ளக விமர்சனங்களை பொதுவெளியில் உரையாடுவதை கைவிடுவதெனவும், கூட்டமைப்பின் பங்காளிகளும், அதற்கு வெளியில் உள்ள தேசியக் கட்சிகளையும் இணைத்து தேசிய பிரச்சினைக்கான பேச்சுக்கள் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகளில் ஒருங்கிணைந்து செயற்படுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு, மற்றும் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றை கிரமமாக நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாராளுமன்றக்குழு கூட்டத்தினை அவசியம் ஏற்பட்டால் சம்பந்தனின் இல்லத்தில் நடத்துவதெனவும், ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தினை ஆகக்குறைந்தது மாதமொன்று ஒருதடவையேனும் முன்னெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.