மரணத்தை மிதித்து சுதந்திர வெளியில் செல்பவர்!-அகரப்பாவலன்.

183 0

மரணத்தை மிதித்து சுதந்திர வெளியில் செல்பவர்!
—————————————————
கார்த்திகை 27
கார்கால மேகக் கூட்டங்கள்
ஒன்று கூடும்…
மாவீரர் இல்லம் நோக்கி
ஏங்கிய தாய் மனங்கள்
படையெடுக்கும்…
காவிய நாயகரின்
திருமுகம் காணத் துடிக்கும்…
வேகம் கூடிச் செல்லும்
மணித்துளிகள் சுருங்கும்
காலவேகம் மங்கும்
மனமெங்கும் நினைவலைகள்
அலைமோதும்…

அன்றொரு நாள்
சிரித்த முகத்துடனும்
கம்பீரத் தோற்றத்துடனும்
தாய்மடி தேடி வந்த
காட்சி விரியும்…

தாய் மண்ணுக்காய்
மரணிக்கப் போகிறவன்
தாயின் முகத்தையும்
தாயின் வாசத்தையும்
நாடி வந்த காட்சி தோன்றும்…

விடைபெறும் போது
மண்ணுக்காய் மரணிக்கும்
பெருமிதத்துடன் ஒரு புன்னகை…
இன்று வந்தவன்
மீண்டும் வருவான் – என்ற
தாயின் நம்பிக்கை
கட்டியணைத்து முத்தமிட்டு
ஆரத்தழுவி முகம் துடைத்து
“பார்த்துப் போ! என
ஏங்கிய மனதுடன்
விடை கொடுப்பாள் தாய்…

என்று சாவோமென
யாரும் அறியார்…
இயற்கையின் விதியாம் – ஆனால்
நம் கருவேங்கைகள்
நாள் குறித்து…
இலக்கு வைத்து…
நேரம் குறித்து…
உயிர் பிரிவதை பார்த்தடி
பேறாக கருதி
சிரித்த படி மரணிப்பார்…

தியாகம்… ஈகம்…
இந்தச் சொல்லின்
உயிர்ப்பை புரிந்தவர்
மாவீரரே!

மரண பயமே
மாந்தரை ஆட்டிப்படைக்கும்
பெரும் சக்தி…

மரணத்தை மிதித்து
சுதந்திர வெளியில்
செல்பவர்கள்
மாவீரர்…

எண்ணிலடங்கா போரின்
தியாகங்களின் மூலசாமிகள்
மாவீரர்! – அவர்கள்
எண்ணத் தூய்மையில் கலந்து விடியலின்
பணியேற்போம்.
-அகரப்பாவலன்-