கப்பலில் சென்று வியட்நாம் அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி ஒருவர் தற்கொலை

158 0

கனடாவுக்கு செல்லும் நோக்கில் தென் சீனக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டு வியட்நாமில் அகதிகளாக தங்கவைத்திருந்த ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இன்று வியாழக்கிழமை (24) இலங்கை அகதி ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்திரலிங்கம் கிரிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 303 பேர் கடந்த 8 ஆம் திகதி திகதி பிலிப்பைன்ஸ்க்கும் வியட்நாமிற்கும் இடையே உள்ள கடலில் கப்பலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது அவர்களை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் கடற்படையினர் காப்பாற்றி வியட்நாம் கொண்டு செல்லப்பட்டு அவர்கள் அங்கு தற்காலிக அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கைக்கு செல்ல முடியாது என கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை அகதிகள் தற்கொலை செய்ய முயற்சித்திருந்த நிலையில் அவர்களை காப்பாற்றி அந்நாட்டிலுள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையளிக்ப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சடலம் தொடர்ந்தும் அந்த நாட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சடலத்தை மீள வழங்குவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் பாரிய தொகையொன்றை கோரி வருவதாகவும்  வியட்நாமிலுள்ள இலங்கை அகதியொருவர் தெரிவித்தார்.