‘சமஷ்டி’ இல்லாத பேச்சு தமிழர்களை ஏமாற்றும் தந்திரம் !

124 0

தமிழ் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு இருக்கின்ற ஒரே ஒரு வழி சமஷ்டி தீர்வு மாத்திரம்தான்.அந்த தீர்வை பற்றி பேச தயாரில்லாத ஒரு இடத்தில் போய் பேசுவதில் எந்த பிரயோசனமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.ஜனநாயக ரீதியில் தெரிவாகாத-மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைவருக்கு – ஆட்சிக்கு தமிழ் மக்கள் சென்று அந்த தலைவருக்கும் அரசுக்கும் அங்கீகாரம் கொடுக்கவேண்டுமென்ற தேவை எங்களுக்கு இல்லை என்று தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு ஆக குறைந்தது ஒற்றையாட்சி ஒரு ஆரம்ப புள்ளியாக கூட இருக்கமுடியாது என்றும் ஒற்றையாட்சியை முழுமையாக நிராகரித்து வெளிப்படையாக ஒரு சமஷ்டித் தீர்வின் ஊடாக மாத்திரம்தான் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டலாம் என்ற கருத்தை  முன்வைத்து, சிங்கள மக்கள் மத்தியில் இந்த விடயத்தை கொண்டு செல்வதாக அரசாங்கமும் ஜனாதிபதியும் வாக்குறுதி வழங்குகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டால் மாத்திரம் தான் அந்த பேச்சில் கலந்துகொள்வது தொடர்பில் சிந்திக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.

நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 கேள்வி:வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக வட  மாகாண பாராளுமன்ற தலைவர்களுடன் பேசவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருக்கிறார்.இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துக்கு ஜனநாயக ரீதியில், மக்கள் மத்தியில் அங்கீகாரம் இல்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.அந்த அடிப்படையில் மக்கள் மத்தியில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அவருடைய அரசாங்கத்துக்கும் செல்வாக்கு இல்லாத ஒரு சூழலில்,நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என்ற சூழ்நிலையில்,பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீள்வதற்கு தேவைப்படுகின்ற நிதி உதவிகள் எந்தளவு தூரத்துக்கு இலங்கைக்கு வழங்கப்படும் என்பது கேள்விக்குறி.

அந்த அடிப்படையில், தன்னுடைய ஆட்சிக்கு அனைவரும் ஒத்துழைக்கிறார்கள், தன்னுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறார்கள், இந்த ஆட்சியை அனைவரும் அங்கீகரிக்கிறார்கள் என்று சர்வதேச சமூகத்துக்கு காட்டவேண்டிய ஒரு இக்கட்டான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருக்கிறார்.அந்த பின்னணியில் தான் தமிழர்களுடன் பேசுவது என்ற ஜனாதிபதியின் அழைப்பு வந்திருக்கிறது.தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு,இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் அதன் உண்மையான நோக்கம்,பேச்சுவார்த்தை மேசையில் தமிழ் தரப்புகள் தன்னுடைய அரசாங்கத்துக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்கி ,அதனூடாக தமிழ் தரப்புகளுடன் தாங்கள் (அரசாங்கம்) பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் என்ற செய்தியை நிதி உதவிகளை வழங்கவுள்ள நாடுகளுக்கு காட்டுவது மாத்திரமே.

எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று தமிழ் தரப்புகள் அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டாலே போதும் அதுவே அரசாங்கத்துக்கு அங்கீகாரத்தை கொடுத்ததாகவே அமையும் என்ற நம்பிக்கையில் தான் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.அந்த அடிப்படையில் செல்வாக்கு அற்ற,தேர்தலில் படுதோல்வியடைந்த,பாராளுமன்றத்தால் மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு (ரணில் விக்ரமசிங்க)பிணை எடுத்து கொடுக்கின்ற செயற்பாட்டில் நாங்கள் (தமிழ் தலைவர்கள்)இறங்குவதாக இருந்தால்,ஆக குறைந்தது தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி ஒரு ஆரம்ப புள்ளியாக கூட இருக்கமுடியாது என்றும் ஒற்றையாட்சியை முழுமையாக நிராகரித்து வெளிப்படையாக ஒரு சமஷ்டித் தீர்வின் ஊடாக மாத்திரம்தான் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டலாம் என்ற கருத்தை அரசாங்கம் முன்வைத்து சிங்கள மக்கள் மத்தியில் இந்த விடயத்தை கொண்டு செல்வதாக வாக்குறுதி வழங்குகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டால் மாத்திரம் தான் நாங்கள் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இந்த பேச்சுவார்த்தை மேசையில் அமர்வது தொடர்பாக பரிசீலிக்க கூடியதாக இருக்கும்.

இவ்வாறு எந்த உத்தரவாதமும் இல்லாமல்,தமிழ் தரப்பு இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது என்பது ,நிபந்தனையில்லாத ஆதரவை வழங்கி ,அவருக்கு (ரணில் விக்ரமசிங்க)ஒரு அங்கீகாரத்தை வழங்கினால், நெருக்கடியில் இருக்கும் இலங்கையை சர்வதேச உதவிகளுடன் காப்பாற்றிவிட்டு ,இறுதியில் தமிழ் மக்களுக்கு எதுவுமே இல்லாமல் நடுத்தெருவில் விடுகின்ற ஒரு செயலாகவே முடியும்.பேச்சுவார்த்தை மேசையில் அமருவதாக இருந்தால் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி அடிப்படையில் தமிழ் தேசத்தின் அங்கீகாரத்துக்குரிய ஒரு தீர்வுக்கு தாங்கள் ஒத்துழைக்க தயார் என தென்னிலங்கைக்கும் தமிழ் தேசத்துக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவாதம் வழங்கினால் மாத்திரமே  அதைப்பற்றி சிந்திக்க முடியும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.

கேள்வி:கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் சந்திப்பதற்கு தமிழ் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை அனைவரும் நிராகரிப்பது போன்று அந்த சந்திப்பில் கலந்துகொள்ளாததை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்:அந்த சந்திப்பை நாங்கள் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி)நிராகரித்த காரணத்தினால் தான் ஏனைய அனைவரும் அதில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு முடிவெடுத்தார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.ஏனெனில்,இந்த சந்திப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தினத்தன்று காலையில் ஐ.நா.அலுவலகத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் ஐ.நா.வின் விஷேட பிரதிநிதிகளை சந்தித்திருந்தார்கள். எனவே,காலையில் ஒன்று சேர்ந்து ஒரு சந்திப்புக்கு சென்றுவிட்டு மாலையில் சம்பந்தனின் அழைப்பை நிராகரித்திருக்கிறார்கள் என்றால் ,நாங்கள் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி)அன்றைய தினம் காலையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய ஆழமான பல கருத்துக்களின் நிமித்தம் தான் அந்த சந்திப்புக்கு தலைவர்கள் செல்லவில்லை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

‘சமஷ்டியே தமிழர் அபிலாஷை’ என ஒரு குரலில் பேச வாருங்கள் என்ற அடிப்படையிலேயே சம்பந்தன் தலைமையிலான அணி  அழைப்பு விடுத்திருந்தது. அப்படியென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வளவு காலமும் சமஷ்டி கோரிக்கையை கைவிட்டிருந்தார்கள் என்பதை அவர்களே ஏற்றுக்கொள்கிற ஒரு நிலமையாகத்தான் இந்த அழைப்பை நாங்கள் பார்க்கின்றோம். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தவரை சமஷ்டியை வலியுறுத்துவதற்கு பொது கூட்டம் ஒன்று போடத் தேவையில்லை. நாங்கள் அதைத்தான் ஆரம்பத்திலிருந்து கூறிவருகின்றோம்.ஆகவே அது தொடர்பில் புதிதாக வலியுறுத்துவதற்கு எந்த தேவையும் கிடையாது.எங்களுக்கு அதுவொரு நிகழ்வே கிடையாது.

ஆனால்,தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இருக்கின்ற ஒற்றுமை என்னெவென்றால்,அவர்கள் ஒற்றையாட்சியையும் 13 ஐயும் தான் இதுவரை காலமும் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இவர்கள் இன்று முற்றுமுழுதாக மக்களால் நிராகரிக்கப்படுகின்ற நிலையில்,ஏதோவொரு வகையில் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்கு தங்களுடைய எஜமான்கள் விரும்பியபடி ஒரு அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்து இந்த ஆட்சியை பலப்படுத்துவதற்குரிய திட்டத்தில் இறங்கவேண்டிய தேவை இருக்கின்ற சூழ்நிலையில்,சமஷ்டி என்று பேசி மக்கள் நம்பிக்கையை பெற்று ,இந்த தடவை தாங்கள் (கூட்டமைப்பு) பிழை விடமாட்டோம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை மேசையில் சென்று அமர்வது தான் கூட்டமைப்பின் நோக்கமாக இருக்கிறது.அந்த அடிப்படையில்,நாங்கள் கூறிய கருத்துக்கள் அவர்களது (கூட்டமைப்பின்) மோசமான செயலை அம்பலப்படுத்தி அதனை முறியடிப்பதற்குரிய நிலைமையை உருவாக்கியிருந்ததுடன், சம்பந்தனின் அழைப்பை நிராகரிக்கும் நிலைமைக்கும் சென்றிருக்கின்றது.

கேள்வி:ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்று கூறுவதை நீங்கள் என்னவாக அடையாளப்படுத்துகிறீர்கள். அவர் (ஜனாதிபதி) எது சம்பந்தமாக கலந்துரையாடவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:தமிழ் மக்களுடைய பிரச்சினை என்று கூறுகின்றபொழுது இனப்பிரச்சினை,பொறுப்புக்கூறல் ,தமிழர் தாயகத்தில் தமிழரின் இருப்பை இல்லாமல் செய்கின்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்துவது போன்ற மூன்று விடயங்களை தான் நாங்கள் கூடுதலாக பேசுவதாக இருக்கவேண்டும்.இனப்பிரச்சினை விவகாரத்தில் நம்பிக்கை கொடுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் அமைந்திருந்ததில்லை.இதனை  நான் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஒரு வருடம் கழித்து அவர் (ரணில் விக்ரமசிங்க)பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார்.அந்த சந்திப்பில், இனப்பிரச்சினை சம்பந்தமாக அவர் எங்களுடன் பேசிய பொழுது,சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு சமஷ்டி தீர்வு என்று நாங்கள் அவரிடம் வலியுறுத்திய பொழுது,அதனை அவர் நிராகரித்ததுடன்,அது நடைமுறைச்சாத்தியமற்றது என்ற கருத்தை எங்களுக்கு தெரிவித்திருந்தார்.அதேபோல்,ரணில் விக்ரமசிங்க பிரதமராக பொறுப்பேற்பதற்கு முதல்நாள் என்னை வந்து சந்தித்தபொழுதும் கூட அதே விடயத்தையே என்னிடம் வலியுறுத்தியிருந்தார்.ஆகவே எங்களை பொறுத்தவரை இனப்பிரச்சினை தீர்வுக்கு சமஷ்டி தீர்வை பற்றி பேச தயாரில்லாத தரப்போடு பேச்சுக்கு செல்வதாக கூறுவது என்பது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகவே இருக்கும்.

தமிழ் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு இருக்கின்ற ஒரே ஒரு வழி சமஷ்டி தீர்வு மாத்திரம்தான்.அந்த தீர்வை பற்றி பேச தயாரில்லாத ஒரு இடத்தில் போய் பேசுவதில் எந்த பிரயோசனமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.ஜனநாயக ரீதியில் தெரிவாகாத-மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைவருக்கு -ஆட்சிக்கு தமிழ் மக்கள் சென்று அந்த தலைவருக்கும் அரசுக்கும் அங்கீகாரம் கொடுக்கவேண்டுமென்ற தேவை எங்களுக்கு இல்லை.

கேள்வி:கடந்தவாரம் பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க பேசுகையில்,உங்களது கட்சியின் ஒத்துழைப்பை வேண்டியிருந்தாரே…

பதில்:அதனை நான் ஒரு விஷேசமான விடயமாக பார்க்கவில்லை.ஏனெனில் அவர் பேசும் பொழுது  வடக்கு-கிழக்கு பிரதிநிதிகளில் நான் மாத்திரமே அங்கு இருந்தேன்.அதனால் அவர் என்னை நோக்கி அவ்வாறு கூறியிருக்கலாம்.அதையும் தாண்டி விஷேசமாக எங்களுடைய ஒத்துழைப்பை கேட்பதாக இருந்தால் அது தொடர்பிலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.ஏனென்றால், அவருக்கு நன்றாக தெரியும், தமிழ் தேசத்தில் தமிழருடைய அபிலாஷைகளுக்காக உண்மையாகவும் இறுக்கமாகவும் இருக்கக்கூடிய ஒரே ஒரு தரப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரம்தான் என்பது.ஏனைய அனைவருடனும் பேசி தான் விரும்பியபடி ஒரு வழிக்கு கொண்டுவரலாம் என்பது அவருக்கு (ரணில்) தெரியும்.

அவ்வாறானதொரு நிலையில்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கை பெற்று ஒரே ஒரு  நம்பிக்கைக்குரிய தரப்பாக வளர்ச்சியடைந்திருக்கின்ற நிலையில்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி அரசாங்கத்தின் பேச்சு முயற்சிக்கு ஒத்துழைக்காவிட்டால் அந்த முயற்சிகள் படுதோல்வியடையும் என்பது அவருக்கு (ரணில்)நன்றாகத் தெரியும்.அதேபோல்,நாங்கள் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி)கலந்துகொள்ளாத ஒரு பேச்சுவார்த்தையில் ஏனைய கட்சிகள் கலந்துகொண்டால் அவர்கள் தமிழ் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்படுவார்கள் என்பதும் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிந்திருக்கும்.ஏனெனில் அவர் அரசியலில் அனுபவமிக்கவர்.

கேள்வி:ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பான வழக்கிலிருந்து நளினி உட்பட அனைவரும் விடுக்கப்பட்டிருப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?,அதில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பங்கள் எவ்வாறு அமையும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:வரவேற்கக்கூடிய ஒரு விடயம்.இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தை மதிக்கின்ற, சட்ட ஆட்சியை மதிக்கின்ற ஒரு அரசு அல்ல.யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழர்களை பொறுத்தவரை அது தான் எங்களுடைய அனுபவம்.சம்பவமொன்றுக்கு சட்ட ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர்   எந்தவொரு தரப்பும் அதற்கு எதிராக நடந்துகொள்ளமுடியாது. ஆனால்,இலங்கை அரசு சட்டங்களை ,ஜனநாயகத்தை மதிக்கின்ற அரசு அல்ல என்ற அடிப்படையில்,ராஜிவ் காந்தி வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்பாமல் பாதுகாக்கவேண்டியது அத்தியாவசியமாகும்.இலங்கை அரசாங்கம் எந்த உத்தரவாதங்களையும் வழங்காமல் அவர்களை நாட்டுக்கு திருப்பி  அனுப்புவது படு மோசமான செயலாகவே பார்க்கவேண்டியிருக்கும்.

கேள்வி:ஒரு பக்கம் சமாதானம் பேசுவதாக காட்டிக்கொண்டாலும் மறுபக்கம் நில அபகரிப்பு போன்ற சம்பவங்கள் வடக்கில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு…?

பதில்:அதனை முற்றுமுழுதாக அம்பலப்படுத்தி ஆகவேண்டுமென்பதற்காகத்தான் பாராளுமன்றத்திலும் வெளியிலும் நாங்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்திவருகின்றோம்.பாராளுமன்றத்தில் எங்களுக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழர் தாயகத்தில் இடம்பெறுகின்ற அநீதிகள் சம்பந்தமாக சுட்டிக்காட்டி வருகின்றோம்.வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கின்ற வேளைகளிலும் கூட தொடர்ச்சியாக இந்த யதார்த்தத்தை தெளிவுபடுத்தி வருகின்றோம்.

ரணில் விக்ரமசிங்க தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுக்கு வந்து போர்நிறுத்த உடன்படிக்கையை  செய்தார். அதேசமயம்,சமாந்தரமாக தமிழீழ விடுதலைப்புலிகளை சர்வதேச மட்டத்தில் ஓரங்கட்டுவதற்கான முயற்சிகளையும் செய்தார்.ஒருபக்கம் பேச்சுவார்த்தை என்று ஈடுபட்டுக்கொண்டு மறுபக்கம் வீழ்ந்துபோயிருந்த இலங்கை இராணுவத்தின் பலத்தை 2003 காலப்பகுதியில் 3 மடங்காக பலப்படுத்தியிருந்தார். செய்வது ஒன்று.மறுபக்கம் அதற்கு நேர்மாறாக நடந்துகொள்வது தான் அவருடைய வரலாறு. இது தான் ரணில் விக்ரமசிங்க.இந்த தடவையும் அதனை செய்வதற்கே அவர் முயல்கிறார்.

ரொஷான் நாகலிங்கம்