மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தவேண்டும் – இரா.துரைரெட்னம்

114 0

அமைச்சர் சந்திரகாந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் நாடாளுமன்றத்தில் தங்களுக்குள் மோதிக்கொள்வதை விடுத்து மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தவேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.

நேற்று (22.11.2022) மட்டு.ஊடக மையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இச்சத்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாணசபை முறைமையினை நடைமுறைப்படுத்த தமிழ் தலைமைகள் விடாமுயற்சியை முன்னெடுக்கவேண்டும் என்று இதன்போது கோரிக்கையினை முன்வைத்தார்.

இந்நிலையில் “மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பாக கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் அபிவிருத்தி குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கிடையே நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்குவாதங்கள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வெட்கக் கேடான விடயங்கள் எனக் கூறினால் அது மிகையாகாது.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இவர்கள் இருவருக்கும் வாக்களித்து, மிகவும் அர்ப்பணிப்புடன் தங்களுக்கான வாக்கினை இவர்களுக்கு அளித்து, அவர்களைப் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதனை யாரும் மறுப்பதற்கில்லை. இது ஜனநாயகப் பண்பாகும். இவ்வாறான மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வரவு செலவுத் திட்டத்தில் ஆற்ற வேண்டிய உரை ஒரு பக்கமிருக்க, இரண்டு பேரும் பல விடயங்களை முன்வைத்து, மாவட்டத்துக்கு இழுக்கை ஏற்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்றத்தில் மாவட்ட மக்களின் பிரச்சினைகளைப் பேசத் தெரியாதென்றால், விடயம் தெரிந்தவர்களிடம் கேட்டு, அறிய வேண்டும். அதை விட்டு விட்டு, இருவரும் தனியான விடயங்களுக்காவும், பொதுவான விடயங்களுக்காகவும் நாடாளுமன்றத்தில் சண்டை பிடிப்பதென்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயங்களல்ல.

குறிப்பிட்ட ஓரிரண்டு தினங்களாக இந்தப் நாடாளுமன்றத்தில் நடப்பதை மட்டக்களப்பு மாவட்ட மக்கள், இலங்கைவாழ் மக்கள் மட்டுமன்றி, உலகவாழ் தமிழ்பேசும் மக்கள் வெட்கித் தலைகுனிந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வினயமாக கேட்டுக் கொள்வது யாதென்றால், தற்போதைய வரவு செலவுத் திட்ட உரையில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது, என்னென்ன தேவைகளுக்காக ஒடுக்கப்பட்டது போன்ற விடயங்களே பேசப்பட வேண்டும். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேசுவதற்காக சிறப்புரிமைகள் இருக்கின்றன.

ஆகவே எதிர்காலத்தில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, இவ்வாறான விவாதங்களைத் தவிர்த்து, மக்கள் நலன் சார்ந்த விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகள் சில தவறுகளை விட்டது போன்று, நீங்கள் செயற்படாதீர்களென வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன். இந்நிலையில் மாவட்டத்தில் நடக்கின்ற விடயங்களை மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் பேசி, அதில் முடிவெடுக்காமல், ஓரக வஞ்சம் காட்டப்பட்டால் அதனைப் நாடாளுமன்றத்தில் பேச உறுப்பினர்களுக்கு உரிமையுண்டு.

இந்நிலையில் தற்போதைய காலகட்டத்தில் இலங்கை அரச தலைவர் ஜனாதிபதி நடைமுறையில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதாகக் கூறியிருக்கின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாமல் ஒழிப்பதற்கு பாரிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருக்கிறது.

மாகாணசபை முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் போது, சில உரிமையை எமது மக்கள் அனுபவிக்கலாம்.

இந்நிலையில் தமிழ்த் தலைமைகள் மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்யத் துடியாய்த் துடிக்கின்ற இலங்கை அரசின் செயற்பாடுகளுக்குத் துணை போகாமல், தேர்தலை உடனடியாக நடாத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.