பசில் ராஜபக்ஷவை வரவேற்க சென்ற பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குங்கள்

138 0

அமெரிக்காவில் இருந்து நாட்டுக்கு வந்த பஷில் ராஜபக்ஷவை வரவேற்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்,உறுப்பினர் விமான நிலையத்திற்கு சென்றமை தேசிய ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

ஆகவே பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினரை ஆணைக்குழுவில் இருந்து வெளியேற்றுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பிரதேச சபை உறுப்பினர் பதவி கூட வகிக்காத பஷில் ராஜபக்ஷவிற்கு எவ்வாறு வீதி போக்குவரத்து பொலிஸார் பாதுகாப்பு வழங்கினார்கள் எனவும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

 

சபாநாயகர் தலைமையில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தற்போது நடைமுறையில் உள்ளது,ஆனால் சுயாதீனத்தன்மை தொடர்பில் கேள்விக்குறியான தன்மை தோற்றம் பெற்றுள்ளது.பஷில் ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு வருகை தந்தார் இவரை வரவேற்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்ரா பெர்னாண்டோ,தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்.பி.பெரேரா ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள்.இது தொடர்பான காணொளி இறுவட்டை (சி.டி) சபையில் சமர்ப்பிக்கிறேன்.நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கிய பஷில் ராஜபக்ஷவை வரவேற்க வெட்கமில்லாமல் விமான நிலையத்திற்கு சென்றவர்களும் சபையில் உள்ளார்கள்.

சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர் இவ்வாறு செயற்பட முடியுமா,ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது,ஆகவே இவ்விருவரையும் ஆணைக்குழுவில் இருந்து காதை விடித்து வெளியேற்றுங்கள் என சபாநாயகரிடம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் நியமனம் இன்னும் ஓரிரு நாட்களில் இடம் பெறும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பிரதேச சபை உறுப்பினர் பதவி கூட வகிக்காத பஷில் ராஜபக்ஷவிற்கு,கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட விருந்தினர் பகுதியில் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது,

அத்துடன் வீதி போக்குவரத்து பொலிஸார் எதனடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டனர் என்பதை சபை முதல்வர் தெளிவுப்படுத்த வேண்டும்.

கடந்த மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கூட செல்ல முடியாத நிலையில் இருந்த பஷில் ராஜபக்ஷவிற்கு எவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது என கேள்வியெழுப்பினார்.