மைத்திரி தலைமையில் ஆரம்பமானது தெற்காசிய பொதுக்கொள்முதல் மாநாடு!

252 0

தெற்காசிய வலயத்தின் நான்காவது பொதுக்கொள்முதல் மாநாடு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 23ஆம் நாள்வரை கொழும்பு மற்றும் கண்டியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி நிதியம் மற்றும் இஸ்லாமிய வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டின் நலனுக்காக புதிய பொருளாதார மற்றும் சமூக சூழலை ஏற்படுத்துவதற்காக மட்டுமன்றி, சிறந்த அபிவிருத்தியை நோக்கி ஒரு தெளிவான பிரவேசத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்புகளுக்கு இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகின்றதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இலத்திரனியல் கொள்முதல் முறைமைக்கு நாட்டை மாற்றுவதன் மூலம் அரச நிதி முகாமைத்துவத்தைத் துரிதமாகவும் வினைத்திறன்மிக்கதாகவும் மேற்கொள்வதுடன் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து ஊழல் மோசடிகளுக்கான வாய்ப்புகளை குறைக்க முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

இம்மாநாட்டின்மூலம், பூகோள ரீதியான கொள்வனவின்போது எமது நாடு உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கும், பிராந்திய நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.