பாராளுமன்றத்திற்கு வருகிற 2024-ம் ஆண்டு தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகின்றன.பல கட்சிகள் தேர்தல் பணிகளையும் தொடங்கி விட்டன. பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி அணியும் தீவிரமாக இறங்கியுள்ளது. அ.தி.மு.க.வில் தற்போது இருக்கும் வாக்காளர் பூத் முகவர்களில் பலர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருப்பதால் அவர்கள் அனைவரையும் மாற்றி விட்டு அனைத்து பூத்களுக்கும் புதிய முகவர்களை நியமிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.
அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து பூத்களில் உள்ள முகவர்களும் மாற்றப்பட்டு புதிய பூத் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு பூத் முகவர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் பூத் முகவர்களுக்கு அவர்களுக்கான பொறுப்புகளை ஒப்படைத்தனர். ஒவ்வொரு பூத்திலும் எவ்வளவு வாக்காளர்கள் இருக்கிறார்கள். எத்தனை பேர் இடம் மாறி சென்றுள்ளனர் என்பதை கணக்கெடுத்து வாக்காளர்களை கவரும் நடவடிக்கைகளில் பூத் ஏஜெண்டுகள் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்போதே பாராளுமன்ற வேலைகளை எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரமாக தொடங்கி விட்டனர்.

