முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார அரசியல் நெருக்கடிகளிற்குமத்தியில் ஜூலை மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கிவந்துள்ளதுடன் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்களை வேட்டையாடிவருகின்றார்.
மாணவ செயற்பாட்டாளர்களை தடுத்துவைப்பதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதே அவரது மிகவும் இழிவான செயல்களில் ஒன்றாக காணப்படுகின்றது.
வியாழக்கிழமை கொழும்பின் நீதவான் ஒருவர் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் ஏற்கனவே 90 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்களை மேலும் தடுத்துவைப்பதற்கான உத்தரவினை பிறப்பித்தார்.
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்தமுதலிகே அனைத்து பல்கலைகழக பிக்குமார் சம்மேளன ஏற்பாட்டாளர் கல்வே ஸ்ரீதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் எதனையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை.
மறுநாள் மாணவ தரைலவர்களை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகைபிரயோகத்தை மேற்கொண்டனர்.
1979 இல் நடைமுறைக்கு வந்த காலம் முதல் நீண்டநாட்கள் கண்மூடித்தனமாக தடுத்துவைப்பதற்கும் சித்திரவதைக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது சிறுபான்மை தமிழ் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்களும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களும் அனேகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகளை துஸ்பிரயோகம் செய்யும் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் முதல் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி மாணவர்களை தடுத்துவைப்பதற்கான தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார்.
எனினும் 2015 இ;ல் பிரதமராகயிருந்தவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்தின் ஒரு பகுதியாக இந்த சட்டத்தை நீக்கப்போவதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஜிஎஸ்பி பிளஸ் என்ற வரிச்சலுகையை பெறுவதற்காக தனது சர்வதேச மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றுவதாக இலங்கை வாக்குறுதியளித்தவேளை 2017 இல் அவர் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
மார்ச்சில் அப்போது நீதியமைச்சராக பணியாற்றிய தற்போதைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஜூலையில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு இதே வாக்குறுதியை வழங்கியிருந்தார்.
இலங்கையின் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இந்த வாக்குறுதியை தொடர்ந்து மீறி வந்துள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவ தலைவர்களையும் ஏனையவர்களையும் விக்கிரமசிங்க விடுதலை செய்யவேண்டும்,சித்திரவதை மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகள் என தண்டனை விதிக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்யவேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நேர்மையான முறையில் அரசாங்கம் நிறுத்திவைக்கவேண்டும், இந்த சட்டத்தை நீக்கவேண்டும்,ஐநா நிபுணர்கள் முன்வைத்துள்ள ஐந்து முன்நிபந்தனைகளை உள்ளடக்கிய சர்வதேச தராதரத்திலான சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியம் உட்பட இலங்கையின் சர்வதேச சகாக்கள் அரசாங்கத்தை அதன் செயற்பாடுகளை அடிப்படையாக வைத்து மதிப்பிடவேண்டும் அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்யவேண்டும்.

