உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. அதேபோல், கல்வி வளர்ச்சி, ஆராய்ச்சி உள்பட அனைத்திலும் உயர்கல்வித் துறை சிறந்ததாக மாற வேண்டும், அதிலும் தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் பொற்காலமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் தற்போதைய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக, பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் என்ற கருத்தை உயர்கல்வித் துறை சமீபத்தில் அறிவுறுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக உயர்கல்வித் துறையின் துணை செயலாளர் ப.தனசேகர், உயர்கல்வித் துறைக்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழகம், கல்லூரிக்கல்வி இயக்குனர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையர் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையையும் அனுப்பி உள்ளார். அதில், ‘கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி காட்டும் விதமாகவும், உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் ‘மேல் அங்கி’ (ஓவர் கோட்) அணிய வேண்டும். மேலும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும்.
இதற்கு அந்தந்த நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பேராசிரியர்கள் தரப்பில் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் எதிர்ப்பு குரலையும் பதிவு செய்கின்றனர்.

