‘புதிய அரசியலமைப்பை திருட்டுத்தனமாக நிறைவேற்ற முயற்சி’

356 0

“புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கி, அதனைத் திருட்டுத்தனமாக நிறைவேற்றுவதற்கே இந்த அரசாங்கம் முயன்று வருகின்றது” என, தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்புத் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையிலிருந்து மக்களைத் திசைத் திருப்புவதற்காகத் தான், சைட்டம் மற்றும் அரிசிப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, புதிய அரசியலமைப்புத் தொடர்பில் ஒரு வார்த்தைகூட சட்டமூலத்தில் அச்சிடப்படவில்லை என்று ஒரு கருத்தையும், நாடாளுமன்ற உறுப்பினரான ஜயம்பதி விக்கிரமரத்ன, சகல பணிகளும் முடிவடைந்துவிட்டன, அடுத்த சில நாட்களிலேயே ஜனாதிபதியிடம் சட்டமூலம் கையளிக்கப்படும் என்று இன்னொரு கருத்தையும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

“இவ்வாறு ஒரே கட்சிக்குள்ளே இருவேறுக் கருத்துகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லமாட்டோம் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும், செல்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியினரும் தெரிவித்து, புதிய அரசியலமைப்புத் தொடர்பில் கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளனர். “புதிய அரசியலமைப்பு விடயத்தில் இந்த அரசாங்கம் கண்ணாம்பூச்சி விளையாட்டை விளையாடுகிறது” என்றார்.