சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள படப்பை அருகே மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் வெங்கடேசன். மாடம்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மாடம்பாக்கம் ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ள பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவருடன் 3-வது வார்டு உறுப்பினர் சத்யாவும் சென்றார்.
அப்போது இவர்களை பின் தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் 9 பேர் வந்தனர். ஒவ்வொரு மோட்டார் சைக்கிளிலும் 3 பேர் அமர்ந்திருந்தனர். இவர்கள் அனைவரும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து கீழே இறங்கி ஒரே நேரத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். வெங்கடேசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசினார்கள். 3 வெடிகுண்டுகளை வீசியதில் ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர் சத்யா ஆகியோர் நிலை குலைந்தனர். இதையடுத்து கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்புவதற்காக இருவரும் ஓட்டம் பிடித்தனர். அப்போது வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்ட 9 பேரும் வெங்கடேசனை விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்த வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இதையடுத்து, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். கொலையாளிகள் 9 பேரையும் இரவோடு இரவாக பிடித்து விட போலீசார் திட்டமிட்டனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையும் நடத்தப்பட்டது. விடிய விடிய நடத்திய சோதனையில் கொலையாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரட்டை கொலைக்கு பழி தீர்க்க கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

