கடனை திருப்பிச் செலுத்த வழங்கப்படவுள்ள சலுகை

118 0

வங்கிகள் மூலம் கடனைப் பெறுவதில் சிரமத்திற்கு உள்ளாகும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர், கடந்த காலங்களில் மாறுபட்ட வட்டி வீதத்தில் பெறப்பட்ட கடனுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டதால் அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் இந்த நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

வட்டி விகித அதிகரிப்பு காரணமாக சில கடனாளிகள் தமது முழு சம்பளத்தையும் கடன் தவணைக்காக செலுத்த வேண்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வாடிக்கையாளர்கள் வங்கியுடன் கலந்துரையாடிய பின்னர் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு உரிய வட்டியை மாத்திரம் செலுத்த முடியும்.

அத்துடன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் 70% ஆக இருந்த சராசரி பணவீக்கம் தற்போது 66% ஆகவும், 95% ஆக இருந்த உணவு பணவீக்கம் 85% ஆகவும் குறைந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நிதிக் கொள்கைகளுடன், அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 4-5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு, மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்றுவதற்கு தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.