அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலி- மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

197 0

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து மீன்வளம் மற்றும் மீனவர்- நலத்துறை ஆணையர் பழனிசாமி மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அதில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் மீனவர்கள் அறிந்திருக்கும் வகையில் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது தென்மேற்கு வங்கக்கடலில் நுழைந்து தமிழக கடல் பகுதியில் நாளை (18-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை தொடரக் கூடும்.

இதன்காரணமாக காற்றின் வேகம் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை வீசக் கூடும். எனவே அந்த நாட்களில் மீணவர்கள் மீன் பிடிக்க அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம். எனவே 18ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.