பலஸ்தீன – அமெரிக்க ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்கா நடத்தும் விசாரணைக்கு தான் ஒத்துழைக்கப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அல்ஜெஸீரா ஊடகவியலாளரான ஷிரீன் அபு அக்லே, கடந்த மே மாதம் 11 ஆம் திகதி, மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய இராணுவத்தின் முற்றுகையொன்று தொடர்பாக செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டார்.
அவர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டார் என பலஸ்தீன அதிகாரிகள் குற்றம் சுமத்தினர்.
ஆனால், பலஸ்தீன ஆயுதபாணிகளால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் தவறுதலாக கொல்ப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேலிய படையினர் இருந்த இடத்திலிருந்தே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என சிஎன்என் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அமெரிக்கா விசாரிக்க வேண்டும் என அமெரிக்க செனட் அங்கத்தவர்கள் 24 பேர் ஜனாதிபதி பைடனிடம் கோரியிருந்தனர்.
இந்நிலையில், ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்துவதாகவும் ஆனால், இவ்விசாரணைக்கு தான் ஒத்துழைக்கப் போவதில்லை எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

