
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கேளிக்கை நிகழ்வுகளை விடுத்து இந்த மாதத்தை உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்க வேண்டும்.
தமிழ் சமூகத்திற்காக உயிர்நீத்த எமது உறவுகள் துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, அதன் புனிதத்தை பாதுகாக்க எமக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நவம்பர் மாதம் தமிழ் மக்களுக்கு முக்கியமான மாதமாகும்.1948 ஆம் ஆண்டு பிரித்தானியர்களிடமிருந்து சிங்கள பேரினவாதம் நாட்டை பெற்றுக் கொண்டதன் பின்னர் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டது. வன்முறை ஊடாக தமிழ்கள் கொல்லப்பட்டார்கள்.
1948ஆம் ஆண்டு முதல் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு எதிராகவே எமது இனம் ஆயுதம் ஏந்தி போராடியது. இந்த ஆயுத போரட்டத்தில் இனத்திற்காக 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் இளைஞர்,யுவதிகள் உயிர்நீத்துள்ளார்கள்.இவர்களை இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்து சிரம் தாழ்த்திக் கொள்கிறேன்.
இராணுவம்,பொலிஸாரின் எதிர்ப்பிற்கு மத்தியில் தான் நாங்கள் இன்றும் எமது உறவுகளை நினைவுகூறுகிறோம். உயிர்நீத்தவர்களின் துயில் இடங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கொடிகாமம், வெள்ளான்குளம், கோப்பாய் ஆகிய துயில் இல்லங்கள்,முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில், முல்வாயில் ஆகிய துயில் இல்லங்கள், வவுனியா மாவட்டத்தில் ஈச்சம்குளம் துயில் இல்லம்,மட்டக்களப்பு மாவட்டத்தில் தாண்டியடி துயில் இல்லம் இன்றும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது.
இராணுவத்தினர் குடி கொண்டுள்ள துயில் இல்லங்களில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றி துயில் இல்லங்களின் புனிதத்தை பாதுகாக்க எமக்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்துகிறேன்.
வடக்கு கிழக்கு மக்கள் அனைவரும் இந்த நினைவேந்தலுக்கான அணிதிரள வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்த்து இந்த மாதத்தை உணர்வுப்பூர்வமாக அனுஸ்டிக்க வேண்டும் என வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

