பருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு..! கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்

288 0

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அதிவேகம் ஒரு இளைஞரின் விதியை மாற்றி, உயிரைக் காவுகொண்டிருக்கிறது.

அண்மைய நாட்களாக யாழ்ப்பாணத்தில் இடம்பெரும் வீதி விபத்துக்களில் அதிகளவில் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களின் உயிர் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தின்போதும், ஒரு இளைஞரின் உயிர் பறிபோயிருக்கிறது. குறித்த இளைஞரோடு உடன் பயணித்த இளைஞன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேற்றைய தினம் விபத்தின் போது உயிரிழந்த இளைஞன் குறித்து அவருடைய நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்தோம்.

திருமலைச்செல்வம் சஞ்ஜீவனுக்கு இப்பொழுது 23 வயது தான் ஆகிறது. மிகச்சிறந்த ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனர் என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.

இந்நிலையில் விபத்தின் போது உயிரிழந்த இளைஞன் குறித்து தன்னுடைய பதிவை வெளியிட்ட உலகப் புகழ்பெற்றவரும், இலங்கையின் பிரபல அறிவிப்பாளருமான அப்துல் ஹமீட் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிடுகையில்,

ஈழத்து மண்ணில், மிகச்சிறந்த ஓர் ‘ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனராக’ வரலாறு படைப்பார் என நான் எதிர்பார்த்த தம்பி ‘சஞ்ஜீவ்’ இன்று காலை, வாகன விபத்தில் தன் இன்னுயிரை நீத்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி, என்னைப் பெரும்சோகத்தில் ஆழ்த்திவிட்டது.

மூன்று மாதங்களுக்கு முன், எண்ணற்ற கனவுகளுடன் என்னைச் சந்தித்த சஞ்சீவ் தன் ‘Drone Camera’ மூலம் ‘ஒரு பறவையின் பார்வையில்’ யாழ் மண்ணின் அழகைப் படம்பிடித்து அனுப்பிய திறமை பார்த்து வியந்துபோனேன்.

பிறப்பவர் எல்லோருமே, என்றோ ஓர் நாள் இறப்பது உறுதி. ஆனால், 23 வயதில் இறப்பு…! பெற்றோருக்கு மட்டுமல்ல அவரை நேசித்த அனைவருக்குமே இது ஓர்-பேரிழப்பு.

தம்பி சஞ்ஜீவ் அவர்களது ஆன்மா, நற்பேறு அடைய பிரார்த்திக்கின்றேன். அவரை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுவொருபுறமிருக்க, பருத்தித்துறையில் பெரியவர் ஒருவர் விபத்துக்கள் குறித்து தனது கவலையை வெளியிடும் போது,

பல திறமைகளை யாழ் இளைஞர்கள் தன்னகத்தே வைத்திருக்கும் நிலையில், இவ்வாறு உயிரிழக்கும் சம்பவமானது எல்லோர் மனதையும் உருக வைக்கின்றது என்றார்.

கடந்த காலங்களாக யாழ்.குடாநாட்டிலேயே அதிகளவு விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், அதில் அநேகமானவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழப்பதாகவும் போக்குவரத்து துறையினர் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு இருக்கையில் பெற்றோர்களோ, இளைஞர்களோ இதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இருப்பது வருத்தமளிக்கும் விடையமாகவே காணப்படுகின்றது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இதேவேளை, கடந்த வருடம், பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பல்கலை மாணவர் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நகைச்சுவையாளர் என்பதை இங்கே அவதானிக்க வேண்டும்.

திறமைகளை வெளிப்படுத்தி சாதிக்க வேண்டிய இளைஞர்கள், பாதியில் சாவதை் தழுவிக்கொள்வது என்பது தமிழனத்தின் துயரமான செய்தியாக காலம் காலமாக தொடர்கின்றது.

இளைஞர்கள் தங்கள் பொறுப்பறிந்து, நிலைமை அறிந்து செயற்படவேண்டும். இவ்வாறான விபத்துக்களின் மூலமாக பாதிக்கப்படுவது, அவர்கள் மட்டுமல்ல, அவர்களை நம்பியிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின், கனவையும், வாழ்வையும் சோகத்தில் ஆழ்த்த முடியும்.

தவிர, உங்கள் இனத்திற்கு நீங்கள் செய்யவேண்டிய கடமைகள் ஏராளம் இருக்கின்றன. வீதியில் இறங்கும் பொழுது உங்களதும், மற்றவர்களதும் வாழ்வையும், எதிர்காலத்தையும் நினைத்து செயற்படுங்கள்.

அதிவேகம், உங்கள் வாழ்வை மட்டுமல்ல, மற்றவர்களின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கிவிடும். வேகத்தை விட நிதானமான செயற்பாடு நீண்ட, நிலையான வாழ்வைத் தரும். பொறுத்தார் பூமியாள்வார்.