கூரிய ஆயுதங்களால் நபர்களை தாக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்த மூவரை பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், இவர்களில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பிரதான சந்தேக நபர் ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
“கொவ்வா” என்ற சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை குருப்புமுல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு வாள்கள், இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் 10 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்றிரவு 5ஆம் திகதி இரவு தொலைபேசி ஊடாக “பெத்தே மிதுன்” என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை அழைத்து அவரை சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொவ்வா உள்ளிட்ட 04 பேரே ´பெத்தே மிதுன்´ என்பவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் பெத்தே மிதுனின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

