தமிழகம், புதுச்சேரியில் கடந்த மாதம் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன் பிறகு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 19ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (16ம் தேதி) உருவாக இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இது வருகிற 19ம் தேதி தமிழக கடலோர பகுதிகளை நெருங்க உள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை கடலோரம் மற்றும் அதன் உள் பகுதிகளில் 19ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதன் எதிரொலியால் தமிழகத்தில் வரும் 20ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

