உட்கட்டமைப்பு வசதிகள், மனிதவளம் மற்றும் ஏனைய அனைத்து வசதிகளும் போதியளவில் காணப்படுவதனால் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்த்துக்கொள்வதற்கு இலங்கை தயார் நிலையில் இருப்பதாக சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் சர்வதேச நாடுகளுக்கான தூதுவர் லின் சொன்ங்டியான் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் சர்வதேச நாடுகளுக்கான தூதுவர் லின் சொன்ங்டியானுக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (14) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங்கும் கலந்துகொண்டிருந்தார்.
இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் சர்வதேச நாடுகளுக்கான தூதுவர், உட்கட்டமைப்பு வசதிகள், மனிதவளம் மற்றும் ஏனைய அனைத்து வசதிகளும் போதியளவில் காணப்படுவதனால் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்த்துக்கொள்வதற்கு இலங்கை தயாராக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்த்துக்கொள்வதற்குத் தற்போது உரியவாறான சட்ட மறுசீரமைப்புக்கள் மாத்திரமே அவசியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி அவசியமான மறுசீரமைப்புக்களின் ஊடாக முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறான சூழ்நிலையொன்றைக் கட்டியெழுப்பினால் அம்பாந்தோட்டை, திருகோணமலை உள்ளடங்கலாக ஏனைய அனைத்து பொருளாதார வலயங்களையும் கொழும்பு துறைமுகநகரத்தையும் சர்வதேசத்தைக் கவரக்கூடிய கட்டமைப்புக்களாக மாற்றியமைப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் சீன ஜனாதிபதியின் சர்வதேச நாடுகளுக்கான தூதுவர் லின் சொன்ங்டியான் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் எடுத்துரைத்துள்ளார்.
‘இந்து சமுத்திரத்தின் மத்தியில் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த அமைவிடம், பெருந்தெருக்கள் மற்றும் துறைமுகங்கள் என்பன உள்ளடங்கலாக விவசாயம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திக்கு அவசியமான சிறப்புத்தேர்ச்சியுடைய தொழிற்படையைக் கொண்டிருத்தல் போன்ற அனைத்துத் தகுதிகளும் இலங்கைக்கு இருக்கின்றது’ என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

