பலர் காணாமல்போயிருப்பதையும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்கான பதிலை நாடி அவர்களது உறவினர்கள் காத்திருப்பதையும் நான் அறிந்ததன் காரணமாகவே காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கான தவிசாளராக எனது நியமனத்தை ஏற்றுக்கொண்டேன். அவ்வாறிருக்கையில் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் நான் கூறியதாக அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் தவறான முறையில் புரிந்துகொள்ளப்பட்டவையாகவே இருக்கின்றன என்பதுடன் நான் அவற்றை முற்றாக மறுக்கின்றேன் என்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல்போனமைக்கான ஆதாரங்கள் எவையும் இல்லை என்றும், காணாமல்போனோரில் பெரும்பான்மையானோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் அல்லது அதற்கு எதிரான குழுக்களாலேயே கடத்தப்பட்டார்கள் என்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்திருப்பதாகக் கடந்தமாத இறுதியில் ஆங்கில ஊடகமொன்றில் வெளியான செய்தி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்ததுடன் அதுகுறித்துப் பலரும் தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் அவ்விடயம் தொடர்பில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மகேஷ் கட்டுலந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
‘இந்த நாட்டில் காணாமல்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் எவருமில்லை’, ‘தமிழினப்படுகொலை இடம்பெறவில்லை. மாறாக 2009 ஆம் ஆண்டு வன்செயலின்போது பொதுமக்கள் 60,000 பேரை இராணுவம் மீட்டுள்ளது. அவ்வன்செயலே படுகொலை என்று சாயம் பூசப்பட்டுள்ளது’, ‘சரணடைந்தவர்கள் காணாமல்போனமைக்கான ஆதாரங்கள் இல்லை. அதேபோன்று காணாமலாக்கப்பட்டவர்களுள் பெரும்பான்மையானோர் புலிகளால் அல்லது அவர்களுக்கு எதிரான குழுக்களால் கடத்தப்பட்டவர்களாவர்’, ‘காணாமல்போனோர் பற்றிய சுமார் 50 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்துவருவது கண்டறியப்பட்டுள்ளது’ என்று நான் கூறியதாக அண்மையகாலங்களில் ஊடகங்களில் வெளியான அனைத்து செய்திகளையும் மறுக்கின்றேன்.
நபர்கள் காணாமல்போயிருப்பதையும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்கான பதிலை நாடி அவர்களது உறவினர்கள் காத்திருப்பதையும் நான் அறிந்ததன் காரணமாகவே காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கான எனது நியமனத்தை ஏற்றுக்கொண்டேன். காணாமல்போனோர் பற்றிய ஆதாரங்களை அடுத்தடுத்து இயங்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் பதிவுசெய்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். அவ்வாறிருக்கையில் என்னை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட கூற்றுக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவையாகவும், தவறான முறையில் விளக்கமளிக்கப்பட்டவையாகவுமே இருக்கின்றன.
காணாமல்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தரவுத்தளமொன்றைத் தொகுப்பதற்கும், அவர்களைத் தேடுவதற்கும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு உரியவாறான நிவாரணத்தை வழங்குவதற்கான வழிவகைகள் குறித்து அரசாங்கத்துக்கும் அதன் முகவர்களுக்கும் பரிந்துரைகளை முன்வைப்பதற்குமான நடவடிக்கைகளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மேற்கொண்டிருக்கின்றது.
அதுமாத்திரமன்றி கடந்த 8 மாதங்களில் 1,549 முறைப்பாடுகள் தொடர்பில் எமது அலுவலகம் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன் அடுத்த வருட இறுதிக்குள் 4,500 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் உத்தேசித்துள்ளது. அவ்விசாரணைகளின் முடிவில், கண்டறியப்பட்ட உண்மைகளுடன்கூடிய விரிவான அறிக்கை வெளியிடப்படும். அதேவேளை காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான 100,000 ரூபா இழப்பீட்டுத்தொகையை 200,000 ரூபாவாக அதிகரிக்குமாறு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வேண்டுகோள்விடுத்திருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

