சதித்திட்டம் தீட்டியது யார்?-புகழேந்தி தங்கராஜ்

309 0

‘பழசையெல்லாம் ஏன் கிளறுகிறீர்கள்’ – என்று சண்டைக்கு வருகிறார்கள் பழைய நண்பர்கள் சிலர். உள்ளூர் அழைப்புக்கும் 25 பைசா வெளியூர் அழைப்புக்கும் 25 பைசா என்கிற ரேட்கட்டர் போட்டுவிட்டார்கள் போலிருக்கிறது…… என்னை ஒரு வார்த்தை பேசவிடாமல் மூச்சுவிடாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கூட இருந்தே குழிபறிப்பவர்களுக்கு மறப்போம் மன்னிப்போமெல்லாம் பொருந்தாது என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சென்னைக் கடற்கரையில் போராடிய இளைஞர்களுக்கு இடையில்போய் உட்கார்ந்துகொண்டு ‘செல்பி’ எடுத்து பேஸ்புக்கில் போட்டுக்கொள்ள அவர்களுக்கு உரிமை இருக்கிறதென்றால் எம் இனம் காக்கக் குரல் கொடுத்த வழக்கறிஞர்களுக்கு நீதி கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது. இதை அவர்கள் புரிந்துகொள்வது நல்லது.

சென்ற மாதம் மெரினாவில் போராடிய இளைஞர்களைக் கலைக்கக் காவல்துறை எடுத்த நடவடிக்கை அடாவடித்தனமானது என்றால் 2009 பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்றத்தில் போராடிய வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அடாவடித்தனமானது அராஜகமானது அநீதியானது. அந்தத் தாக்குதலில் ஸ்டாலினுக்குத் தொடர்பிருக்கிறதா இல்லையா என்பதுதான் என்னுடைய கேள்வி.

எடுத்த எடுப்பிலேயே இந்தக் கேள்வியை நான் எழுப்பிவிடவில்லை. ‘மெரினா தாக்குதலுக்கு நீதிவிசாரணை தேவை’ என்று திருவாளர் மு.க.ஸ்டாலின் முழங்குவதைப் பார்த்தபிறகுதான் இதைக் கேட்டேன். 2009 உயர்நீதிமன்றத் தாக்குதலுக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததை ஸ்டாலின் அறிந்திருக்கிறாரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே கேட்டேன்.

2009 பிப்ரவரி 19ம் தேதி காவல்துறையால் தாக்கப்பட்ட சென்னை வழக்கறிஞர்கள் செய்த ‘குற்றம்’ இலங்கை நடத்திய இனப்படுகொலையை எதிர்த்துப் போராடியது மட்டும்தான்! அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்தது சோனியா காங்கிரஸ். அதன் ஆசியுடன்தான் தமிழின அழிப்பில் ஈடுபட்டது இலங்கை. அதன் தயவில்தான் இங்கே பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தது தி.மு.க.!

சோனியாவை எதிர்த்தால் பதவி பறிபோய்விடும் என்கிற பரிதாபகரமான நிலையில் திமுக இருந்தது உண்மைதான்! ஆனால் ‘அதனால்தான் இனப்படுகொலையைக் கண்டும் காணாததைப் போல் தி.மு.க. இருந்தது’ – என்கிற வாதத்தில் உண்மையில்லை. இனப்படுகொலையைக் கண்டும் காணாதவர்கள் போல் இருந்திருந்தால் அதற்கு எதிரான போராட்டங்கள் விஷயத்திலும் அப்படித்தானே இருந்திருக்க வேண்டும்! போராடியவர்களை ஏன் தூக்கிப்போட்டு மிதிக்கவேண்டும்?

இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த திமுக அரசு முயற்சிக்காவிட்டாலும் கூட 8 கோடி தமிழர்களால் அதைச் சாதிக்க முடிந்திருக்கும். தன்னால் அதைச் செய்ய முயலாத நிலையில் அதற்காகப் போராடிய தமிழக மக்களையாவது தடுக்காமல் இருந்திருக்க வேண்டும். திமுக. அப்படி இருந்ததா?

தெருப்பொறுக்கிகளால் தாக்கப்படுகிற தன்னுடைய பிள்ளையைக் காப்பாற்ற ஓடி வருகிற ஒரு தாயைப் போல வழக்கறிஞர்களைக் காப்பாற்ற ஓடோடி வந்த நீதியரசர் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தனுக்கு அந்தக் ‘குற்றத்துக்காக’ அந்த நிமிடமே தண்டனை கொடுக்கப்பட்டதே! அந்தக் கொடுமைக்குக் காரணமானவர்களுக்கு மட்டும் இந்த நிமிடம் வரை தண்டனை வழங்கப்படவில்லையே….. ஏன்?

காவல்துறையின் தாக்குதல் தொடர்பாக விசாரித்த உயர்நீதிமன்றம் சென்னைக் காவல்துறை ஆணையாளர் ராதாகிருஷ்ணன் கூடுதல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோரைக் கண்டித்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. இது ஸ்டாலினுக்குத் தெரியுமா தெரியாதா?

‘நடந்த தாக்குதலுக்கு காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணனே முழுப் பொறுப்பு’ என்று ஏ.கே.விஸ்வநாதன் நீதிமன்றத்தில் ஒரு மனு கொடுத்தார். ‘ஆணையர் என்ன சொன்னாரோ அதைத்தான் நாங்கள் செய்தோம். கூடுதல்படையுடன் ஆணையர் வந்தபிறகே ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் உள்ளிட்டோர் காயமடைந்தனர்’ என்று அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார். உயர்நீதிமன்ற வளாகத்தில் ராதாகிருஷ்ணனும் இருந்ததை ஆதாரங்களுடன் நிரூபித்திருந்தார் அவர்..

தனக்கும் தாக்குதலுக்கும் சம்பந்தமில்லையென்று காவல்துறை ஆணையர் தப்பிக்கப் பார்த்ததாலேயே ‘அவர்தான் உத்தரவு பிறப்பித்தார்’ என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் கூடுதல் ஆணையருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ‘நாங்கள் பொறுப்பல்ல’ என்று ஆளாளுக்கு இப்படி தப்பிக்கப் பார்த்ததிலிருந்தேஇ நடந்த தாக்குதலின் லட்சணம் தெளிவாகிறது.

கண்மூடித்தனமான ஒரு தாக்குதலை நடத்தும் முடிவை யாரோ ஒரு அதிகாரி தான் எடுத்தார் என்றால் அரசுக்கு அவப்பெயரைத் தேடித்தந்த அவர்மீது திமுக அரசு கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? அதற்கு நேர்மாறாக கண்டிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி பரிந்து பேசினாரே…… ஏன்?

உயர்நீதிமன்ற அசம்பாவிதம் திமுக ஆட்சிக்கு எதிரான சதி – என்று கூட ஒரு சந்தர்ப்பத்தில் கலைஞர் பேசியதாக நினைவு. சதி – என்று அவர்குறிப்பிட்டது போலீசாரின் தாக்குதலையா வழக்கறிஞர்களின் போராட்டத்தையா என்பது நினைவில்லை. இரண்டில் ஒன்றைத்தான் அப்படிக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

கலைஞர் பெயரால் ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து வெளிவந்த முதல் அறிக்கை ‘விரோதங்களை மறந்து போலீசாரும் வழக்கறிஞர்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியது. அது பிரச்சினையைத் திசை திருப்புகிற வேலையா இல்லையா?

போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் விரோதம் – என்றெல்லாம் பேசியது எவ்வளவு அபாண்டம்! இனப்படுகொலைக்கு எதிராகப் போராடிய வழக்கறிஞர்களை மத்திய மாநில அரசுகள் விரோதிகளாகவே பாவித்தன என்பதுதானே உண்மை! அந்த விரோதம் ஒன்றைத் தவிர பிப்ரவரி 19 தாக்குதலுக்கு வேறெது காரணம்?

தாக்குதலுக்கு முன்பாக ஆயுதப் போலீசார் கொண்டுவந்து குவிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? போராடுபவர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்கிற அச்சம்தான் அதற்குக் காரணமென்றால் அரசு அஞ்சியதைப் போல வழக்கறிஞர்கள் வன்முறையில் இறங்கினார்களா? வெறுங்கையுடன் இருந்த வழக்கறிஞர்கள் போலீசாரிடம் தாறுமாறாக அடிவாங்கியதைத்தானே தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது!

வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று உண்மையாகவே அஞ்சியிருந்தால் அது அரசின் முட்டாள்தனம். அப்படியெல்லாம் அஞ்சுவதைப் போல் காட்டிக்கொண்டு ஆயுதப்படையைக் கொண்டுவந்து குவித்திருந்தால் அது அரசு செய்த திட்டமிட்ட சதி.

உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்த காவல்நிலையம் தீக்கிரையாக்கப்பட்டதை யாராவது சுட்டிக்காட்டினால் அது பொருத்தமற்றது பொறுப்பற்றது. காவல்நிலையம் எரிக்கப்பட்டது காவல்துறையின் தாக்குதலுக்கு முன்பா பின்பா என்பதையெல்லாம் யோசிக்காமல் பேசக்கூடாது.

இன்று மெரினாவில் போலீசார் நடத்திய தாக்குதலுக்குப் பிறகே ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம் எரிக்கப்பட்டது. அன்றும் இதுதான் நடந்தது. உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் நடத்திய கொடுந் தாக்குதலுக்குப் பிறகே காவல்நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. இது எரிக்கப்பட்ட பாணியிலேயேதான் அதுவும் எரிக்கப்பட்டதா – என்கிற கேள்விக்கே நான் வரவில்லை. ‘காவல்நிலையம் எரிக்கப்பட்டதாலா தடியடி நடத்தப்பட்டது’ – என்பதுதான் எனது கேள்வி.

இப்போதும் தி.மு.க.வே ஆட்சியில் நீடித்திருந்தால் மெரினா போராட்டம் ரத்தக்களறியில்தான் முடிந்திருக்கும்! இதில் கேள்விக்கே இடமில்லை. 2009 பிப்ரவரி 19 வரலாறு தெள்ளத்தெளிவாக இதைத் தெரிவிக்கிறது. இதைக் குறித்த உறுத்தலே இல்லாமல் ‘மெரினா தாக்குதலுக்கு நீதி விசாரணை வேண்டும்’ என்று நீட்டி முழக்கிப் பேசுகிறார் ஸ்டாலின். ‘உயர்நீதிமன்றத் தாக்குதலிலும் மெரினா தாக்குதலிலும் தொடர்புடைய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்க நமக்கு இருக்கிற தகுதி ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் எப்படி இருக்க முடியும்!

8 ஆண்டுகள் ஆகிறது ஈழத்தில் இனப்படுகொலை நடந்து! இன்னும் நீதி கிடைக்கவில்லை. உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ரத்தம் சிந்தியும் 8 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதற்கும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. அதற்கெல்லாம் நீதி கிடைக்கத் தடையாக இருந்தவர்களே மெரினா சம்பவத்துக்கு நீதி விசாரணை வேண்டுமென்று கூசாமல் பேசுவதற்குப் பெயர்தான் அரசியல்.

‘இதற்கு நீதி வழங்கச் சொல்கிறீர்களே அதற்கு நீதி கொடுத்துவிட்டீர்களா’ என்றெல்லாம் கேட்காமல் பத்திரிகையாளர்கள் ‘மொய்’மறந்து நிற்பதற்குச் சூட்டப்பட்டிருக்கிற கௌரவப் பெயர்தான் – ‘பத்திரிகா தர்மம்’.

ஆளுங்கட்சியாக யார் இருந்தாலும் அவர்கள் உத்தரவிட்டவுடன் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறார்களே….. அவர்களுக்குப் பெயர்தான் – ‘உங்கள் நண்பன்’.

ஈழத்துக்கான போராட்டம் இடிந்தகரை போராட்டம் மெரினா போராட்டம் என்று எவ்வளவு போராட்டங்களை ‘உங்கள் நண்பர்கள்’ நசுக்கியிருப்பார்கள் என்று திரும்பிப் பார்க்கிறேன்.

மெரினாவில் கூடிய இளைஞர்களைக் காட்டிலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் திரண்ட மீனவ உறவுகளை அதிகமாக மதித்தவன் நான். அந்தப் போராட்டப்பந்தலில் தொங்கிய தூளிகளில் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தன. அந்தக் குழந்தைகளின் தாய்மார்கள் எழுப்பிய முழக்கத்தில்இ கடலோரப் பகுதிகள் விழித்து எழுந்துகொண்டிருந்தன. எப்படிப் போராடவேண்டுமென்று இந்தியாவுக்கே கற்றுத்தந்த அந்த மக்களை அடித்து உதைத்துப் பாடம் கற்பித்தவர்கள்இ இதே ‘உங்கள் நண்பர்கள்’!

உயர்நீதிமன்றத்திலும் இடிந்தகரையிலும் மெரினாவிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களின் நோக்கம் ஒரே மாதிரியானது. மூன்றுமே அரசின் துரோகத்தைக் கண்டித்துப் போராடிய அறப்போராளிகளுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் பாடம். மூன்றுமே திட்டமிட்ட தாக்குதல். மூன்றுமே ஆட்சியாளர்களின் உத்தரவின்றி நடக்கவில்லை. மூன்றிலுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

தமிழரின் பாரம்பரியத்தை மீட்க மெரினாவில் திரண்டார்கள் இளைஞர்கள். தங்கள் நீரும் நிலமும் வாழ்வும் பறிபோவதைத் தடுக்க இடிந்தகரையில் கூடினார்கள் எங்கள் மீனவச் சொந்தங்கள். எமது வழக்கறிஞர்களோ எம் தொப்புள்கொடி உறவுகளின் உயிர்களைக் காக்கப் போராடினார்கள். அதனால்தான் நீதி கேட்கிறேன். ‘தாக்குதலுக்கு உத்தரவிட்டது கலைஞரா ஸ்டாலினா அதிகாரிகளா’ என்று கேள்வி கேட்கிறேன்.

எந்த அறப்போராட்டத்திலும் சதி – சூழ்ச்சி என்கிற பேச்சுக்கே இடமில்லை. அதை வன்முறைப் போராட்டமாகக் காட்ட ‘சதி’ செய்கிறவர்கள் ஆளுவோரும் அதிகாரிகளும்தான்! அந்தச் சதியை நிறைவேற்றுகிறவர்களே ‘போராடியவர்கள் சதி செய்தனர்’ என்று கூசாமல் பேசுவார்கள். ஏனெனில் அவர்கள் ‘உங்கள் நண்பர்கள்’. இந்தத் தாத்பரியத்தைப் புரிந்துகொள்ளாமல் ‘பழசையெல்லாம் கிளறாதீர்கள்’ – என்று என்மீது பாய்கிறார்கள் நண்பர்கள்.

‘வழக்கறிஞர்களை ஓட ஓட விரட்டி அடிப்பது…… மண்டைகளை உடைப்பது……. ரத்தக்காயங்களை ஏற்படுத்துவது…….. வன்முறையில் ஈடுபட்டதாக அவர்கள் மீதே பிளேட்டைத் திருப்புவது….. அதன்மூலம் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை நசுக்குவது’ – என்பது சர்வநிச்சயமாக திட்டமிட்ட சதி. மேலதிகமாக அதில் இன்னொரு சதியும் இருந்திருக்குமென்று யூகிக்கிறேன். அது தமிழகமெங்கும் இனப்படுகொலைக்கு எதிராகப் போராடியவர்களை மறைமுகமாக அச்சுறுத்துகிற சதி.

‘உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களையே காலில் போட்டு மிதிக்கிற இந்த அரசு – சாமானியர்களான நம்மை என்ன பாடுபடுத்தும்’ என்கிற அச்சத்தை அனைவர் மனத்திலும் விதைத்து தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களைக் குழிதோண்டிப் புதைப்பது – என்பது உயர்நீதிமன்றத் தாக்குதல் சதியின் அடிப்படை நோக்கமாக இருந்திருக்கலாம். இவ்வளவு வக்கிரத்துடன் அந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியவர் யார்? அது எவருடைய BRAIN CHILD? இதை நாம் தெரிந்துகொண்டாக வேண்டும்.

2009ல் முதல்வர் கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது லகான் ஸ்டாலின் கையில் இருந்தது. அன்று போலவே இன்றும் தலைவர் செயல்பட இயலாத நிலையில் லகான் அவர் கையில்தான் இருக்கிறது. உயர்நீதிமன்றத் தாக்குதல் தொடர்பான ஐயங்களை அகற்றி தன்னுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற அவர் முன்வரவேண்டும்.

இன்னும் ஒருபடி மேலே போய் பிப்ரவரி 19 தாக்குதல் தொடர்பாக ஸ்டாலின் பகிரங்க மன்னிப்புக் கேட்டாரென்றால் அவர்மீது புதிய நம்பிக்கை ஏற்படும். ‘திமுக ஒரு ஜனநாயக இயக்கம் தான்’ என்கிற தோற்றம் வலுப்படும். இதையெல்லாம் செய்ய ஸ்டாலின் தயங்கமாட்டார் – என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்