நாங்கள் உயிர் ஆயுதமாக மாறுவதை விட வேறு வழியில்லை: கேப்பாப்புலவு மக்கள்

134 0

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாண முதலமைச்சரும் பிலக்குடியிருப்பு மக்களை நேரில் சந்திக்கவேண்டும்.

எங்களுடைய இன்னல்களை ஆட்சியாளர்களுக்கு கூறவேண்டும். இல்லையேல் நாங்கள் உயிர் ஆயுதமாக மாறுவதைவிட வேறு வழியில்லை. என பிலக்குடியிருப்பு மக்கள் கூறியுள்ளனர்.

தங்களுடைய சொந்த காணிகளில் தங்களை மீள்குடியேற்றக்கோரி பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த 19 நாட்களாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த 19 நாட்களிலும் அரசாங்கம் எந்தவொரு பதிலையும் வழங்காதநிலையில் மக்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக மக்கள் மேலும்கூறுகையில்,

கடந்த 19 நாட்களாக எங்களுடைய சொந்த காணிகளை கேட்டு போராடி வருகின்றோம். ஆனால்அரசாங்கம் எமக்கு எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை.

மாறாக எம்மில் இருந்து 5 பேரை பிரதமருடன் சந்திப்புக்கு வருமாறு அழைத்தார்கள். ஆனால் நாங்கள் செல்லவில்லை.

காரணம் எமக்காக பேச வேண்டியவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே. அவர்கள் பேச வேண்டும். அவர்கள் எமக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். என்பதற்காகவே நாங்கள் பிரதமருடனான சந்திப்பை நிராகரித்தோம்.

இந்நிலையில் எமக்காக பேசவேண்டியவர்கள் சி ல விடயங்களை பேசியிருப்பதாக நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். ஆனால் எமக்கு நேரில் வந்து எந்தவொரு தகவலையும் கூறவில்லை.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக எம்மை சந்திக்கவேண்டும்.

எங்களுடைய பிரச்சினைகளை, நாங்கள் அனுபவித்து கொண்டிருக்கும்இன்னல்களை அரசாங்கத்திற்கு கூறவேண்டும். அப்படி இல்லையேல் நாங்கள் உயிர் ஆயுதமாக மாறுவதை விட வேறு வழியிருப்பதாக நாங்கள் கருதவில்லை.

அதனோடு எல்லாம் முடிந்து விடும் என்றில்லை. எங்களுடைய அரசாங்கம் இந்த அரசாங்கத்துடன் எங்களை போல் அல்லாமல் வேறுவழியில் போராடும் நிலை வரும்.

எங்களுடைய பிள்ளைகளிடம் எங்களை விடவும் கோபமும், விரக்தியும் உருவாகியுள்ளது. எனவே அவ்வாறான வழிக்கு எங்கள் பிள்ளைகளை தள்ள வேண்டாம். என்ற செய்தியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு கூற வேண்டும்.

அதனோடு 19 நாட்களாக நாங்கள் பனியிலும், வெயிலிலும்கிடந்து போராடி கொண்டிருக்கும் நிலையில், எமக்கு எந்தவொரு பதிலையும் வழங்காமல்மௌனம் காத்து கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்துடன், அழுத்தம் கொடுக்குமளவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசவேண்டும்.

என நாங்கள் விரும்புவதுடன், நாங்கள்தற்சமயம் முள்ளிவாய்க்காலின் 2ம் பாகத்தை அனுபவித்து கொண்டிருக்கின்றோம். என்பதைசர்வதேச நாடுகளுக்கு கூற வேண்டும் எனவும் மக்கள் மேலும் கூறியுள்ளனர்.