ஈரான் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விவாதிக்க வேண்டும்- 12 நாடுகள் கோரிக்கை

94 0

ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக பேசியதாக கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் டெஹ்ரானில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் அவர் பலியானதாக குற்றச் சாட்டு எழுந்தது.

இதை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும் எரித்தும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் 185 பேர் பலியாகி விட்டதாகவும், இதில் 19 பேர் குழந்தைகள் என்றும் ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது.

இதனை ஈரான் அதிகாரிகள் மறுத்தனர்.  இந்நிலையில் ஈரான் போராட்ட வன்முறை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் விவாதம் நடத்த 12 நாடுகளின் சார்பில் ஜெர்மனி மற்றும் ஐஸ்லாந்து நாடுகளின் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நாடுகளின் தூதர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஐ.நா.மனித உரிமைகள் கவுசிலிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதில் ஈரான் இஸ்லாமிய குடியரசில், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பொறுத்தவரையில்மனித உரிமைகள் மோசமடைந்து வருவதாகவும் அங்கு நிலைமையை சரி செய்ய, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் அமர்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐநா. மனித உரிமைகள் கவுன்சிலின் வாக்களிக்கும் உரிமை உள்ள உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த முன்மொழிவை ஆதரித்துள்ளனர். நவம்பர் 24ந் தேதி இந்த கூட்டம் நடத்த வேண்டும் என கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டத்தை கூட்டுவதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.