10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை- அதிமுக, பாஜக புறக்கணிப்பு

121 0

பொருளாதாரத்தில்பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு பா.ஜனதா- காங்கிரஸ் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் வரவேற்றுள்ளது.

10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டி உள்ளது. இந்தநிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத் துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி தி.மு.க. சார்பில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, வக்கீல் வில்சன் பங்கேற்க இன்று காலை 10.30 மணி அளவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன. இன்றைய கூட்டத்தில் நடைபெறும் ஆலோசனையில் 10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்வது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. ம.தி.முக. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா எம்.எல்.ஏ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சின்ராஜ், பா.ம.க. சார்பில் வக்கீல் பாலு, மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்டு கட்சி சார்பில் நாகை மாலி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பாரதீய ஜனதா, அ.தி.மு.க., புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளன.