எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதும் கூவத்தூர் விடுதியை மூடியது நிர்வாகம்

251 0

தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்கும் வகையில், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், சசிகலாவுக்கு ஆதரவு அளித்து கையெழுத்திட்ட எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. எதிரணியான ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் இதனை விமர்சித்ததுடன், எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு சென்று மக்களின் கருத்தை அறிந்து அதன்படி நடக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தொடர்ந்து எம்எல்ஏ.க்கள் கூவத்தூர் விடுதியிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்குப் பதில், எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் இன்று தனது மெஜாரிட்டியை நிரூபிக்க ஏதுவாக சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக, அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. சட்டசபை வளாகத்திலும் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கூவத்தூரில் 11 நாட்களாக எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்த தனியார் சொகுசு விடுதி (கோல்டன் பே ரெசார்ட்) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை திரும்பியதையடுத்து, பராமரிப்பு பணிகளுக்காக விடுதியை மூடியிருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கூவத்தூர் விடுதியில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மாற்று இடத்தில் தங்க வைக்கப்படலாம்.