மீண்டும் ஷி ஜின்பிங்

163 0

சீனாவின் ஜனாதிபதியாக ஷி ஜின்பிங் மீண்டும் தெரிவாகி இருக்கிறார். ஆளும் கம்யூனிஸக் கட்சியின் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு அவர் ஜனாதிபதியாக கடமையாற்றுவார்.

இரண்டு தடவைகள் சீனாவின் தலைவராக இருந்தவர். இந்தக் காலப்பகுதியில் சர்வதேச அரங்கில் சீன தேசத்தை அசைக்க முடியாத சக்தியாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்தவர். இது கட்டுக்கோப்பான ஆட்சி நிர்வாகத்தால் சாத்தியப்பட்டது.

பொருளாதாரமும், சமூகமும் அரச அதிகாரத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. வெளிவிவகார, பாதுகாப்புக் கொள்கைகள் இறுக்கமாக்கப்பட்டன. இத்தகைய ஆட்சி நிர்வாகம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வெற்றியா, ஷி ஜிங்பின்னின் தலைமைத்துவ ஆற்றலுக்குக் கிடைத்த சன்மானமா என்பது முக்கியமான கேள்வி.

பெருமை மிக்க வரலாற்றிற்கும், செழுமை மிக்க சமூக கலாசார விழுமியங்களுக்கும் புகழ் பெற்ற தேசம். இரு சாம்ராஜ்யங்களால் ஆளப்பட்டு, பின்னர் புரட்சியின் மூலம் பொதுவுடைமைக் கோட்பாடுகளை வரித்துக் கொண்டு வளர்ச்சியின் உச்சத்தில் நிற்கிறது.

இந்தப்புரட்சி என்பது சாமான்யமானது அல்ல. ஒவ்வொரு கம்யூனிஸப் போராளியும் வியர்வையும், இரத்தமும் சிந்தி, பெரும் அர்ப்பணிப்போடு நிறைவேற்றிய காரியம். புரட்சியில் கூட்டு உழைப்பு உண்டு. தனிமனிதனின் தலைமைத்துவ வழிகாட்டலும் உண்டு.

அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சி என்ற மாபெரும் சக்தியின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்ட ஆட்சி நிர்வாக முறைமை என்பது சீனாவின் சாதனை என்றால், அந்த சாதனை நோக்கி புரட்சியை வழிநடத்திய தலைவர்கள் இருக்கிறார்கள்.

இந்தத் தலைவர்களுள் சீன மக்கள் ஒப்பற்றவராகக் கருதும் மாவோ சே துங் பிரதானமானவர். இன்று ஷி ஜின்பிங்கிற்கு அவருக்கு சமமான அந்தஸ்த்து வழங்கப்படுவதைக் காண்கிறோம்.

மக்கள் சீனக் குடியரசு என்ற தேசம் மாவோ சேதுங்கின் கோட்பாடுகளின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டது. அவற்றை மாவோயிஸக் கோட்பாடுகள் என்போம். இந்த மாபெரும் தலைவரைத் தொடந்து, எந்தவொரு அதிகாரமும் தனிமனிதனின் கையில் குவியக்கூடாது என்பதில் கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் அக்கறையாக இருந்தது.

இதற்காக கட்சியின் பதவிநிலைகளுக்குள் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டன. எனினும், நவீன சீனாவைக் கட்டமைப்பதற்காக ஷி ஜின்பிங் முன்வைத்த கோட்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பானதாக அங்கீகரித்தது.

அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் மாவோயிஸக் கோட்பாடுகள் போன்று, ‘ஷி ஜிங்பின்னின் சிந்தனைகள்’ சீனாவின் அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட்டன. மாவோயிஸக் கோட்பாடுகளுக்குப் பின்னர், ஒரு அரசியல் தலைவரின் கோட்பாடுகள் அவரது பெயர் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட முதற்சந்தர்ப்பம். அதன்மூலம், மாவோ சே துங்கிற்கு சமமான அந்தஸ்த்து ஷி ஜின்பிங்கிற்கு கிடைக்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும்.

அப்படிப் பார்த்தால், சீனாவின் அடுத்த பெருந்தலைவராக ஷியை அடையாளப்படுத்த முடியும். ஒரு கட்டுக்கோப்பான கம்யூனிஸ ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பிற்குள் இந்தப் பெருமை எளிதாகக் கிடைத்து விடுவது கிடையாது.

ஒரு தலைவன் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும். புடம் போட்டு செதுக்கிக் கொள்வது அவசியம். ஷி ஜின்பிங் கடந்து வந்த பாதை இலகுவானது அல்ல. முட்கள் நிரம்பியது. வலிகள் நிறைந்தது.

இந்த மனிதர் சோதனைக் காலத்தில் பிறந்தார். சிவில் யுத்தத்தைத் தொடர்ந்து, கம்யூனிஸக் கட்சி ஆட்சிபீடமேறி நான்கு ஆண்டுகள். ஆட்சி நிலைமாற்றத்தின் சகல கஷ்டங்களும் இருந்தன. இவரது தந்தை கம்யூனிஸ கட்சியின் உயர்மட்ட உறுப்பினர். கெரில்லா படையணியின் கட்டளைத் தளபதி.

இந்த மனிதர் கம்யூனிஸ்ட் கட்சியின் இறுக்கமான கோட்பாடுகளைத் தாண்டி, ஒப்பீட்டளவில் தாராளமயக் கொள்கைகளைக் கொண்டிருந்தால், பெருந்தலைவர் மாவோவின் வெறுப்பை சம்பாதித்தவர்.

இந்த வெறுப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் விளைவுகள் மோசமானவையாக இருந்தன.

 

 

 

 

 

கம்யூனிஸ்ட் கட்சி ஷி ஸொங்ஸ_ன்னின் குடும்பத்தை வெறுத்தொதுக்கியது. இந்த வெறுப்பில் இருந்து மகனும் தப்பவில்லை. அவர் பொது இடங்களில் பகிரங்கமாக இழிவுபடுத்தப்பட்டார். அவரது ஒன்றுவிட்ட சகோதரி கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு.

சமூகத்தில் அந்தஸ்த்து நிறைந்த குடும்பமொன்றில் பிறந்து, தலைவர்களை உருவாக்கிய கல்விக் கூடமாக கருதப்படும் பள்ளிக்கூடத்தில் படித்த சிறுவன். தமது ஒன்பதாவது வயதில், தந்தை கட்சித் துரோகியாக குற்றஞ்சாட்டப்பட்டு எங்கோவொரு மூலையில் அஞ்ஞாதவாசத்திற்காக உழவு இயந்திரத் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக அனுப்பப்பட்ட கொடுமைகளையெல்லாம் ஷி ஜின்பிங் அனுபவிக்க நேர்ந்தது.

இதில் வியப்பான விடயமொன்று உண்டு. தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சீன இளைஞர் யுவதிகள் அனைவரையும் செம்படை வீரர்களாக மாற்றும் நோக்கத்துடன் மாவோ சே துங் ஆரம்பித்தது தான் கலாசார புரட்சி இயக்கம்.

இதற்காக இளைஞர் யுவதிகள் வீதியில் இறங்கிப் போராடிய சமயம், தந்தையார் பொதுஇடத்தில் விசாரிக்கப்பட்டு, வீதியில் தர தரவென்று இழுத்துச் செல்லப்பட்டு, பல வருடகாலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே இயக்கத்தின் கீழ், சீனாவின் இளைஞர் யுவதிகள் கிராமப்புறங்களுக்கு கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டார்கள். எவ்வளவு படித்தவராக இருந்தாலும், இளந்தலைமுறை கிராமிய விவசாயிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமது இளவயதில் ஷி ஜிங்பின்னும் தொலைதூரத்தில் உள்ள கிராமமொன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டு கடுமையான உழைப்பில் ஈடுபட்டார். அந்த ஆறு வருடகால உழைப்பு தம்மை மாற்றியதாக ஷி சொல்வார். தெளிவான இலக்கொன்று உருவாகி, தம்முள் நம்பிக்கை நிறைந்ததாக அவர் கூறுவார்.

உழைப்பாளி, விவசாயி, படைவீரர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கும் இட ஒதுக்கீட்டின் கீழ், ஷிங்குவா பல்கலைக்கழகத்தில் ஷி ஜிங்பின் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்தப் பல்கலைக்கழக சூழமைவில் அவருக்குள் கம்யூனிஸ சித்தாந்தங்களை ஆழ விதைத்தபோதிலும், இவருக்குள் தாம் பாதுகாப்பாக இல்லையென்ற உணர்வு உந்திக் கொண்டே இருந்தது.

ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்க வேண்டும். அதற்குரிய சட்டம் வகுக்கப்பட வேண்டுமெனக் குரல் கொடுத்தவர், தந்தையார். தமையனோ, மாவோயிஸ பிரசாரங்களுக்குள் தம்மை வடிவமைத்துக் கொண்டதுடன் கட்சியின் இறுக்கமான கொள்கைகளுக்குள் அடைக்கலம் புகுந்தார். எனினும், ஷி, இராணுவ பயிற்சியைத் தொடர்ந்து முப்பதாவது வயதில் அரசியலில் பிரவேசித்து, நகரின் துணை மேயராக, மாநில ஆளுநராக, கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினராக, துணை ஜனாதிபதியாக, பின்னர் ஜனாதிபதியாக கடமையாற்றிய காலம் முழுவதும் இறுக்கமான கொள்கைகளில் இருந்து அவர் விலகவில்லை.

தென் சீனக்கடலில் உள்ள தீவுகளை மீண்டும் பெறமுனைந்ததும், ஜின்ஜியான் மாநிலத்தில் உள்ள உய்குர் முஸ்லிம் குழுக்கள் மீது மோசமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டதும், ஹொங்கொங்கில் ஜனநாயக மாற்றம் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை தயவு,தாட்சயம் அன்றி ஒடுக்கியதும், அத்தகைய இறுக்கமான கொள்கைகளின் வெளிப்பாடாகவே நோக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே, அவரது கொள்கைகள் ‘ஷ ஜிங்பின்’ கோட்பாடுகளாக அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்டதுடன், அரசியல் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவர் பத்து வருடங்களுக்கு மேலாக மீண்டுமொரு தடவை சீனாவின் ஜனாதிபதியாக கடமையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எத்தனையோ சவால்கள் இருந்தாலும், சீனா பொருளாதார வல்லரசாக மாறுவதற்கு காரணமாக இருந்தவை கம்யூனிஸ கோட்பாடுகளின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்ட ஆட்சி நிர்வாக முறைமை தானென்பதை மறுக்க முடியாது.

இந்த வளர்ச்சிக்குரிய காரணங்களை புரிந்து கொள்ளாத, சகித்துக் கொள்ளாத மேலைத்தேய உலகம், இதனை அடக்குமுறையாக வர்ணிப்பதில் வியப்பில்லை. ஷி ஜிங்பின் என்ற மனிதரை அதிகார மோகம் கொண்ட அடக்குமுறை ஆட்சியாளர் என்று கண்டிப்பதையும் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

ஷி ஜிங்பின் அடுத்தவராக இருக்க வேண்டும் என்று சீன மக்கள் விரும்பினால், அந்த விருப்பம் கம்யூனிஸ ஆட்சி நிர்வாக கட்டமைப்பிற்குள் சரியாக பிரதிபலிக்குமாயின், சீன மக்களைப் பற்றி மேற்குலகம் ஏன் கவலைப்பட வேண்டும்?

சதீஷ் கிருஷ்ணபிள்ளை