புதிய பிரதமரும் மகாராணியும் இலங்கை இனப்பிரச்சினையும்

170 0

ரிஷி சுனக் உலக ஏகாதிபத்திய சக்தியாக திகழ்ந்த பிரித்தானியாவின் முதல் இந்து பிரதமர். இதுவரை வெள்ளை இனத்தவர்களே இவ்வுயர் பதவியை வகித்த நிலையில் இவரின் தெரிவானது  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கை இனப்பிரச்சினை நன்கறிந்தவர். இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார் என்று தமிழ்த்தேசியவாதிகள் கூறுகின்றனர்.சிலர் கடிதமும் எழுதியுள்ளனர்.

மறைந்த எலிசபெத் மகாராணியை சிலர் சமாதானப்புறா என்கின்றனர். மத்திய கிழக்கில் கொடுங்கோல் ஆட்சிகளுக்கு அவர் உதவியதையும் முன்னர் ஆட்சிபுரிந்த மன்னர்களின் கொடுமைகளையும் உலகறியும்.கத்தோலிக்கர் புரட்டஸ்தாந்து மோதல்கள் கத்தோலிக்கம் பிரிந்து அங்கிலிக்கன்(ஆங்கில திருச்சபை) உருவாகவும் அவர்களே காரணம்.

எலிசபெத் ராணியியின் காலம்  இனப்பிரச்சினை தீர்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ( செப் 23) பாராளுமன்ற அஞ்சலி உரையில் கூறினார். பொது நலவாய நாடுகளின் தலைவி இலங்கையின் இப்பிரச்சினை  இனவன்முறைகள் யுத்தத்தை நன்கு அறிந்தவர் தீர்த்திருக்காலம்.

மகாராணி 1954 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் முதன் முதலாக இலங்கைக்கு வந்தபோது தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதே இனப்பிரச்சினை ஆரம்பமானது. பொது நலவாய நாடுகள் (கொமன்வெல்த்)  1956,1958, 1977,1983  இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை ஏன் தடுக்கவில்லை.

1957 லண்டன் கொமன்வெலத் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட வட்டுக்கோட்டை எம்.பி-அ.அமிர்தலிங்கம் இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் குறித்து காவலூர் வ.நவரத்தினம் எழுதிய CEYLON FACES CRISIS  ஆங்கில நூலின் பிரதிகளை  பிரதிநிதிகளிடம் வழங்கி இனப்பிரச்சினையை தீர்க்குமாறும் கோரியிருந்தார்.மகாராணியும் அறிந்திருப்பார்.

1961  மார்ச் 7 முதல் 17 வரை லண்டன் கொமன்வெல்த்  பிரதமர்கள் மாநாட்டில் பிரதமர் சிறிமாவோ தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான சம்பவங்களை எழுப்பியபோது “உங்கள் நாட்டில் சிறுபான்மை தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கி தீர்க்குமாறு தென்னாபிரிக்க பிரதமர் டாக்டர் வேர்வோட் சிறிமாவுக்கு பதிலடி கொடுத்தார்.

இது லண்டன் பத்திரிகைகளில் பிரதான செய்தி. சிறிமாவுக்கு  எதிராக தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அப்போது வடக்கு கிழக்கில் சிங்களத்தை திணிப்பதை  எதிர்த்து தமிழரசின் சத்தியாக்கிரம் இடம்பெற்றது .இவற்றையும் மகாராணி அறிந்தவர்.

வடக்கு கிழக்கு யுத்தம்- இலங்கை இராணுவத்துக்கு பிரித்தானிய Keenie Meenie Services (KMS Ltd) தனியார் இராணுவ சேவை விசேட அதிரடிப் படைக்கு உதவியது.பிரித்தானிய விமானிகள் யுத்தத்தில் உதவினர்.1980 களில் பிரித்தானியாவிடம் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆயுதங்களை கேட்டிருந்தார்.இதுவும் மகாராணிக்கு தெரிந்ததே.

1972 மே 22 இலங்கை குடியரசானதும் மகாராணியின் ஆட்சிமுறையும் அவரின் பிரதிநிதியான மகா தேசாதிபதியின் (Governor General) அதிகாரங்களும் நீக்கப்பட்டன.அதுவரை தேசாதிபதியிடம்  பல அதிகாரங்களும் இருந்தன.அவரே முப்படை தளபதி.

இலங்கை வழக்குகளின் தீர்ப்புக்களுக்கு எதிராக  பிரித்தானிய மேன் முறையீடு (பிரிவி கவுன்சில்-Privy Council) செய்யப்பட்டது குடியரசானதும் நிறுத்தப்பட்டது. சிறந்த சட்டத்தரணிகளுக்கு 6 ஆம் ஜோர்ஜ் மன்னர் ஆட்சியில் ( King’s Councel) பட்டம் வழங்கப்பட்டது.அவரது மறைவுக்கு பின்பு ராணி சட்டத்தரணி (Queen’s Councel) பட்டம்.குடியரசானதும் ( President’s Councel) ஜனாதிபதி சட்டத்தரணியாக மாறியது.

1962 ஜனவரி 27 பிரதமர் சிறிமாவோ ஆட்சியை கவிழ்க்க முயன்ற சதிப்புரட்சியில் 24 இராணுவ கடற்படை,பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் முதலாவது குற்றச்சாட்டு மகாராணிக்கு எதிராக சதி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சதியுடன் தொடர்புபட்டதாக  மகாராணியின் பிரதிநிதியான மகா தேசாதிபதி சேர் ஒலிவர் குணத்திலக்க மீது சட்ட நடவடிக்கை எடுக்காது தடுத்து லண்டன் சென்று வாழுவதற்கு மகாராணியாரே உதவியிருந்தார் என்று சுதந்திரக்கட்சியினர் கூறினார்கள்.

எலிசபெத் மகாராணி முதன் முதலாக 1954 ஏப்ரல் 10 இலங்கைக்கு வந்தபோது ஏப்ரல் 12 சுதந்திர சதுக்கத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து சிம்மாசனப்பிரசங்கத்தை நிகழ்த்திய பின்பு நன்றி உரையை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும்  உணவு விவசாய அமைச்சர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆற்றினார்.

வரலாற்று முக்கியத்துவ இந்நிகழ்வில் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்காமை இனப்பிரச்சினைக்கு வித்திட்டது. வவுனியா எம்.பி.பேராசிரியர் செ.சுந்தரலிங்கம் இதனைக்கண்டித்தார்.

அரசில் தமிழ் எம்.பிக்கள்,அமைச்சர்கள் இருந்தும் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக  பிரதமர் கொத்தலாவலை மீது குற்றம் சுமத்தினார்.கைத்தொழில் மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலமும்  கண்டித்தார்.

பிரதமர் கொத்தலாவல 1954 இல் யாழ்ப்பாணம் வந்தபோது யாழ். மாநகர சபை நகர மண்டபத்தில் மேயர் சி.பொன்னம்பலம் தலைமையில் அமோக வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு பிரதமர் மேடையில் ஏறியதும் மக்களுடன் கலந்து நின்ற அ. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழரசுக்கட்சி இளைஞர்கள் சுமார் 200 பேர் திடீரென தமது பொக்கற்றுக்குள் மறைத்து வைத்திருந்த கறுப்பு துணிகளை தூக்கி காட்டி ” கொத்தலாவல திரும்பி போ! “என்று ஆங்கிலத்தில் கத்தினார்கள்.

தமிழர்களின் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சியின் முதலாவது நேரடி நடவடிக்கை.பிரதமர்  அதிர்ச்சியடைந்தார்.பொலிசார் குண்டாந்தடி பிரயோகம் செய்ததில் அமிர்தலிங்கமும் இளைஞர்களும் படுகாயமடைந்தனர்.அப்போது அமிர்தலிங்கம் எம்.பியாக தெரிவாகவில்லை. இளம் சட்டத்தரணி. எலிசபெத் மகாராணியின் வரவேற்பில் தமிழுக்கு உரிய இடமளிக்காது புறக்கணிக்கப்பட்டதால் பிரதமருக்கு தமிழர்கள் எதிர்ப்பை தெரிவிப்பதாக  கூறப்பட்டது.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் இளைஞர் காங்கிரஸ் ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில் பிரதமருக்கு வரவேற்பளித்தபோது சிங்களம் தமிழ் இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார் பலத்த கரகோசம்.இனி இனப்பிரச்சினையே நாட்டில் இல்லை என தமிழர்கள் பிரதமரில் நம்பிக்கை கொண்டனர்.

தமிழர்களின் ஆதரவை,வாக்குகளை நாடு முழுவதும் ஐக்கிய தேசிக்கட்சி எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளவும் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களை தமது பக்கம் இழுக்கவுமே பிரதமர் இப்படி கூறியதாகவும் இது சாத்தியப்படாது என அமிர்தலிங்கம் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் பிரதமர் கூறிய சம அந்தஸ்து விவகாரம் அவர் கொழும்பு திரும்புவதற்கு முன்பே தெற்கில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது.

ஆனந்தா கல்லூரியின் அதிபர் எல்.எச்.மேதானந்த சிங்களவர் இனிமேல் தமிழை படிக்கவேண்டும் என பிரதமர் வடக்கில் கூறியுள்ளார் என்று சிங்கள மக்களிடையே  இனவாதமாக  பிரசாரம் செய்தார்.

1956 ஜூன் 5 தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து தமிழரசுக்கட்சியினர் பாராளுமன்றத்தின் முன்பாக சத்தியாக்கிரகம் இருந்தபோது வடக்கின் உணவுப் பொருட்களை, தமிழ் சட்டத்தரணிகளை,தமிழ் மருத்துவர்களை பகிஷ்கரிக்குமாறும் கோரியவரே இந்த மேதானந்தா.இவரின் ஆதரவாளர்களும் அன்று தமிழர்களை தாக்கினார்கள்.

பிரதமர் தனது  தொடங்கஸ்லந்தை தொகுதிக்கு சென்றபோது வீதியில்  நின்ற பௌத்த பிக்குமார் தமிழுக்கு சம அந்தஸ்தா நாம் தமிழ் கற்கவேண்டுமா எனக்கோசமிட்டு  அவருக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.கொத்தலாவல வீதியில் வைத்தே துணிந்து பிக்குமாரை கண்டித்தார்.

பௌத்த மத விடயங்களை உங்கள் பணி! அரசியல் விடயங்களில் தலையிடாதீர்கள்! என்று பதிலளித்தார்.

இச்சம்பவங்களை ஆராய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாராநாயக்க பதவிக்கு வருவதற்கும்  ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதற்கும் இனவாதத்தை துரும்புச்சீட்டாக பயன்படுத்த தீர்மானித்தே தான் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் ஆங்கிலத்துக்கு பதிலாக சிங்களத்தை அரச மொழியாக்குவேன் என்று எங்கும் பிரசாரம் செய்தார்.

இது தெற்கில் காட்டுத்தீயாக பரவியது.பௌத்த குருமார்,நாட்டுப்புற மக்கள் பண்டாரநாயக்கவே சிங்கள இனத்தின் இரட்சகரும் பாதுகாவலனும் என நம்பினார்கள்.அவருக்கு ஆதரவளித்தனர்.

பண்டாரநாயக்காவின் உரைகளை கேட்டு அவர் பின்னால் திரளும் மக்களை கண்ட பிரதமர் கொத்தலாவலயும்,ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களும் இரு மொழி சம அந்தஸ்து கொள்கையை மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். கொத்தலாவலைக்கு கட்சிக்குள் எதிர்ப்பும் கிளம்பியது.ஜே.ஆர்.ஜெயவர்த்தனவே இதனை கிளப்பினார்.

1956 பெப்ரவரி 7 களனியில் நடைபெற்ற  ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கொத்தலாவல யாழ்ப்பாணத்தில் கூறியிருந்த இரு மொழிகள் சம அந்தஸ்து கொள்கையை கைவிடுவதாகவும் தனிச்சிங்களமே தமது கொள்கை என்றும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் ஐக்கியத்துக்கும், தேசியத்துக்கும் விடைகொடுத்தனர்.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான அல்பிறட் தம்பிஐயா (ஊர்காவற்றுறை),எஸ்.எம்.இராசமாணிக்கம்  (பட்டிருப்பு), வீ.நல்லையா (கல்குடா), சி.சிற்றம்பலம் (மன்னார்) மற்றும் சுப்பையா நடேசபிள்ளை (காங்கேசன்துறை) அருணாசலம் மகாதேவா உட்பட அக்கட்சியின் தமிழ் பிரமுகர்கள்  தனிச்சிங்கள தீர்மானம் திறைவேறியதும் மாநாட்டை விட்டு வெளியேறினார்கள்.

எஸ்.எம்.இராசமாணிக்கம் தமிழரசுக் கட்சியில் இணைந்தார்.சு.நடேசபிள்ளை தமிழரசு தலைவர் செல்வநாயகத்திடம் தோற்றார்.

1956 தேர்தலில் தமிழரசுக்கட்சி பல இடங்களில் வெற்றி பெற்றது. பண்டாரநாயக்காவும் 1956 ஏப்ரல் தேர்தலில் பதவிக்கு வந்து தனிச்சிங்கள மொழியை அரச கரும மொழியாக சட்டமாக்கினார்.அன்றிலிருந்து இனப்பிரச்சினை ஆரம்பமாகி இன்றுவரை தொடர்கிறது.

ம.ரூபன்.