மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்; சரியான நேரத்தில் அரசு முடிவெடுக்கும்

193 0

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டுவது குறித்து சரியான நேரத்தில் அரசு முடிவெடுக்கும் என டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது பிறந்தநாளையொட்டி, சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்குகீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு தமிழக அரசு சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 1939-ல் தலித் மக்களை ஆலய பிரவேசம் செய்ய வைத்ததில் முக்கிய பங்கு முத்துராமலிங்கத் தேவருக்கு உண்டு. சட்டப்பேரவை, நாடாளுமன்றம் என இரு வேறு தேர்தல்களிலும் வெற்றி பெற்ற மாபெரும் தலைவர் அவர்.ஆன்மிகத்தையும் அரசியலையும் கடைப்பிடித்தாலும் ஒன்றுக்கொன்று மோதலின்றி மக்கள் நலனில் கவனம் செலுத்தினார். ஜாதி, சமய வித்தியாசமின்றி வாழ்ந்தார் முத்துராமலிங்கத் தேவர். தனது சொந்த நிலத்தை தலித் மக்களுக்கு வழங்கினார். இதையெல்லாம் பலர் மறந்துவிட்டனர். மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயர் வைப்பது தொடர்பாக சரியான நேரத்தில் அரசு முடிவெடுக்கும். தமிழகத்துக்கும் சேர்த்துதான் மத்திய அமைச்சர்கள் பொறுப்பில் உள்ளனர். அவர்கள் இங்கு வருவதை நிச்சயம் வரவேற்கிறேன். அதில் எந்த தவறும் இல்லை. நிர்வாக பணிகளுக்காக இங்கு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.