29 ஆண்டுகளுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு

228 0

தமிழக சட்டசபையில் 29 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.

அன்று எம்.ஜி.ஆர். இறந்தபோது நடந்தது, இப்போது ஜெயலலிதா மறைவிலும் தொடருகிறது.

இதில், எடப்பாடி பழனிசாமி நிரூபிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.

கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுள்ள நிலையில், அவரது அணியில் உள்ள எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

முதல்- அமைச்சர் பதவியில் அவர் நீடிக்க வேண்டும் என்றால், சட்டசபையில் இன்று அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

தமிழக சட்டசபை வரலாற்றில் இது 3வது நம்பிக்கை ஓட்டெடுப்பு ஆகும். இறுதியாக 29 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் இந்த நிகழ்வு நடந்தது. அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, 1987ம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி மரணம் அடைந்தார்.

அவரது மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டன.

அந்த நேரத்தில், தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜானகி அம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டசபையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் குரானா 3 வாரம் காலஅவகாசம் கொடுத்தார்.

அதன்படி, 1988-ம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி காலை 10 மணிக்கு சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெற்றது.

ஜானகி அம்மாள் ஆதரவாளராக அப்போதைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இருந்தார்.

அப்போது 131 எம்.எல்.ஏ.க்களை கொண்ட அ.தி.மு.க.வில், ஜானகி அம்மாள் அணியில் 98 பேரும், ஜெயலலிதா அணியில் 28 பேரும் இருந்தனர்.

காங்கிரசில் 64 பேரும், தி.மு.க.வில் 12 பேரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் 4 பேரும், ஜனதா கட்சியில் 3 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் 2 பேரும், முஸ்லிம் லீக் கட்சியில் 2 பேரும், பார்வர்டு பிளாக் கட்சியில் 2 பேரும், குடியரசு கட்சியில் ஒருவரும், சுயேச்சையாக ஒருவரும் அவையில் இருந்தனர்.

12 இடங்கள் காலியாக இருந்தன. அப்போது, ஜெயலலிதா அணியில் முன்னாள் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசர், துரை ராமசாமி ஆகியோர் இருந்தனர்.

அன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியதும், சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக தொலைபேசியில் தெரிவித்ததாக கூறி, சபையை பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தார்.

மீண்டும் 12 மணிக்கு சட்டசபை கூடியபோது, கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், திருச்சி சவுந்தரராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், அரங்கநாயகம் ஆகிய 6 பேரை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்குவதாக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அதிரடியாக அறிவித்தார்.

இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

மீண்டும் சபை மாலை 3 மணிக்கு கூடும் என்று அறிவிக்கப்பட்டது. மாலை 3 மணிக்கு அவை கூடியபோது மீண்டும் அமளி ஏற்பட்டது. ஜானகி அம்மாள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தவிர ஏனைய எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் கலவரத்தில் ஈடுபட்டனர். நாற்காலிகள், சோடா பாட்டில்கள் பறந்தன. போலீசார் உள்ளே புகுந்து தடியடி நடத்தினார்கள். மாலை 3.15 மணிக்கு மீண்டும் கூட்டம் கூடியபோது, காங்கிரஸ், ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, குடியரசு கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளவில்லை.

மாலை 3.37 மணிக்கு ஜானகி அம்மாள் தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 8 தி.மு.க. உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

2 முஸ்லிம் லீக் உறுப்பினர்களும், ஒரு ஜனதா கட்சி உறுப்பினரும் நடுநிலை வகித்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அம்மாள் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வாக்கெடுப்பின்போது அவைக்கு வராத ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 27 பேரை பதவி நீக்கம் செய்வதாக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார். அன்று சட்டசபையில் நடந்த கலவரத்தில் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உள்பட உறுப்பினர்கள் பலர் காயம் அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து நிலவிய அரசியல் குழப்பத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அம்மாள் வெற்றி பெற்ற 2வது நாளில் அவரது அமைச்சரவை ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1989-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்பட்டதால் ஜானகி அம்மாள் அணி ‘இரட்டை புறா’ சின்னத்திலும், ஜெயலலிதா அணி ‘சேவல்’ சின்னத்திலும் போட்டியிட்டது.

தேர்தலில் தி.மு.க. 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஜெயலலிதா அணி 27 இடங்களிலும், ஜானகி அம்மாள் அணி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜானகி அம்மாள் தோல்வியடைந்தார்.

இதனால் அவர் அரசியலைவிட்டு ஒதுங்கியதை தொடர்ந்து இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. ‘இரட்டை இலை’ சின்னமும் மீட்கப்பட்டது.

1991-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில், அதே ஆண்டில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில், அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். இது கடந்தகால அரசியல் வரலாறு.

எம்.ஜி.ஆர். மறைவையொட்டி 1988-ம் ஆண்டு ஏற்பட்டதை போன்றே, இப்போது ஜெயலலிதா மறைவையொட்டி அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டசபையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் பலம் அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி அணியினர் தங்களுக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளனர்.

இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிப்பாரா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.