அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமையுடையோர் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்க முடியாது என்ற திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் , இரட்டை குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த தகவல்களை திரட்டுவது நெருக்கடி மிக்க செயற்பாடாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இரட்டை குடியுரிமையுடையோர் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்க முடியாது என்ற திருத்தம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இரட்டை குடியுரிமையுடன் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிப்பவர்கள் தாமாக பதவி விலக வேண்டும் என்று மகாசங்கத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து புதன்கிழமை (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,
இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்கான வழிமுறையொன்று அரசாங்கத்திடம் இல்லை. எனக்கு இரட்டை குடியுரிமை கிடையாது.
இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது. எனினும் இது தொடர்பில் அரசாங்கத்தினால் தேடிப்பார்க்க முடியாது.
எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். சட்ட ரீதியாக நீதிமன்றத்தினால் வெளிப்படுத்துவதைத் தவிர , குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரட்டை குடியுரிமையுடையவரா என்பதை அரசாங்கத்தினால் கண்டு பிடிக்க முடியாது. எனவே இது நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருக்கின்றார்.
இரட்டை குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
2015 ஆம் ஆண்டு முதல் இரட்டை குடியுரிமையுடையோர் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளிப்படுத்தியுள்ளார்.
அரசாங்கத்திடம் இரட்டை குடியுரிமையுடையோர் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கு முறையான வழிமுறையொன்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , அவ்வாறானவர்கள் தாமாகவே பதவி விலக வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

