ஏமனில் துக்க நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வீட்டைக் குறிவைத்து குண்டுவீச்சு நடத்தின. இதில் 8 பெண்கள், ஒரு குழந்தை என 9 பேர் கொல்லப்பட்டனர்.
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அதிபருக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் களம் இறங்கி, ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
அங்கு சவுதி கூட்டுப்படைகளின் தாக்குதலின்போது அப்பாவி மக்கள் பலியாவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம், தலைநகர் சனாவில் ஒரு துக்க நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த சமூக நலக்கூடத்தின்மீது சவுதி கூட்டுப்படையினர் நடத்திய குண்டு வீச்சில் 140 பேர் கொல்லப்பட்டனர்.
இதேபோன்றதொரு தாக்குதல், மறுபடியும் சனாவில் நடந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் அர்ஹாப் பகுதி பழங்குடி இனத்தலைவர் வீட்டில் ஒரு பெண் இறந்துவிட்டதைத் தொடர்ந்து துக்க நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது போர் விமானங்கள் அந்த வீட்டைக் குறிவைத்து குண்டுவீச்சு நடத்தின. இதில் 8 பெண்கள், ஒரு குழந்தை என 9 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம், அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சவுதி கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளரை ஊடகத்தினர் தொடர்பு கொள்ள முயன்றும், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.