ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

361 0

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், எஸ்.பார்த்திபன் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘தமிழக முதல்-அமைச்சராக 4 முறைக்கு மேல் இருந்தவர் ஜெயலலிதா. இவர் தன் ஆட்சிக்காலத்தில் பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார்.

இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு பின்னர், அவர் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லத்தை அ.தி.மு.க.வினர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றவேண்டும் என்று தமிழக தலைமை செயலாளருக்கும், சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் கடந்த டிசம்பர் 9-ந் தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை’ என்று கூறியிருந்தார்.

மேலும் அந்த மனுவில், ‘தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்த காமராஜர், ராஜாஜி போன்ற தலைவர்களின் வீடுகளை நினைவு இல்லமாக தமிழக அரசு மாற்றியது போல, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தையும், நினைவு இல்லமாக மாற்ற உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் , நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர், ‘ஏற்கனவே வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி ஜனவரி 12-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதே கோரிக்கையுடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.