ஒரு தலைமுறைக்குள் பெண்கள் சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கான திட்டமொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
குடும்பவன்முறையை முடிவிற்கு கொண்டுவருவதற்கான புதிய திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய ஊடகங்கள் பாடசாலைகள் நீதிதுறை தொழில்நுட்ப நிறுவனங்கள் மருத்துவ துறையினர் மற்றும் குற்றவாளிகள் செயற்படும் விதத்தில் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என புதிய திட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வன்முறைகளை தவிர்ப்பது அவற்றிற்கு பதிலளிப்பது தொடர்பான பல யோசனைகள் புதிய திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளிற்கு எதிரான வன்முறைகள் தவிர்க்க முடியாதவை அல்ல என தெரிவித்துள்ள புதிய அறிக்கை பாலின வன்முறைகளிற்கு காரணமான சமூக பொருளாதார அரசியல் பொருளாதார காரணிகளிற்கு தீர்வை காண்பதன் மூலம் ஒரு தலைமுறையில் இதனை முடிவிற்கு கொண்டுவரலாம் என தெரிவித்துள்ளது.
மத்திய மாநில அரசாங்கங்கள் அனைத்தும் இந்த திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன.
மூன்றில் ஒரு பெண்கள் உடல்ரீதியான வன்முறைகளை எதிர்கொண்டுள்ளனர் ஐந்தில் ஒருவர் பாலியல் ரீதியிலான வன்முறைகளை எதிர்கொண்டுள்ளனர் என அறிக்கை தெரிவித்துள்ளது.
18 முதல் 44 வயதுடைய பெண்களின் நோய்கள் மற்றும் இறப்பிற்கு நெருக்கமான சகாவின் வன்முறையே காரணமாக உள்ளது இது தவிர்க்ககூடியது எனவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு பத்து நாளைக்கும் ஒரு பெண் தனது நெருங்கிய சகாவால் கொல்லப்படுகின்றார் எனவும் அவுஸ்திரேலிய அறிக்கை தெரிவித்துள்ளது.
பெண்கள் சிறுவர்களிற்கு எதிரான வன்முறையால் வருடாந்தம் 26 பில்லியன் டொலர் பொருளாதாரஇழப்பு எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்று காலத்தில் வன்முறைகள் அதிகரித்தன மூன்றில் இரண்டு பெண்கள் வன்முறைகளை அனுபவித்துள்ளனர் பெருந்தொற்று ஆரம்பமான பின்னரே இது அதிகரித்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்களும் சிறுவர்களும் ஆரோக்கியமான ஆண்மை மற்றும் சிறந்த உறவுகளை வளர்ப்பது குறித்த இந்த திட்டம் வலியுறுத்தியுள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் குறித்து நிலவும் கருத்துக்களை கேள்விக்குட்படுத்தவேணடும்,ஆண்கள் சிறந்த தந்தைகளாக விளங்குவதற்கான திறன்களை வளர்த்தல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

