ராஜபக்ஷர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

307 0

நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் மொட்டு கட்சியை கட்டியெழுப்ப தட்டு தடுமாறுகின்றனர் என புசல்லாவ நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமை இயற்கையாக ஏற்பட்டதல்ல. நாட்டிற்கு தலைமை தாங்கியவர்களால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளாலும் தவறான வழிமுறைகளாலும் ஏற்பட்டதாகும்.

இந்நிலைமையில் இருந்து மீண்டு வருவதற்கு இன்னும் பல வருடங்கள் எடுக்கும் என கூறப்படுகின்றது. அதற்கும் நாம் பல தியாகங்களோடு செயற்பட வேண்டியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு பதிலாக மொட்டு கட்சியை கட்டியெழுப்புவதற்கு தட்டி தடுமாறுவது வேடிக்கையாக உள்ளது.

நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு யார் காரணமென அனைவருக்கும் தெரியும். கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். ராஜபக்சாக்களும் அவர்களது சகாக்களும் இதன் பின்னனணியில் உள்ளார். கோட்டாபய அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றதாக பல பிழையான தீர்மானங்களை எடுத்தது. அதன் போது நாட்டு மக்கள் பல்வேறு வழிகளிலும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளை சுட்டி காட்டினர்.

மக்கள் எதிர்ப்புகளையோ, போராட்டங்களையோ, புத்திஜீவிகளின் கருத்துக்களையோ அன்றைய அரசாங்கம் செவிமடுக்கவில்லை. தன்னிச்சையாகவும், தான்தோன்றித்தனமாகவும் முடிவுகளை எடுத்தது. அதனது விளைவையே இன்று நாங்கள் சந்தித்துக்கொண்டு இருக்கின்றோம். மக்கள் இன்று பட்டினி நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.

நாட்டு மக்களை பட்டினி நிலைக்கு தள்ளிவிட்டு இன்று மொட்டு கட்சியினர் பேரணி நடத்துகின்றனர். மீண்டும் ராஜபக்சக்களை ஆட்சி கதிரையில் அமர்த்துவோம் என சூளுரைக்கின்றனர். இதில் இருந்து நாம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள முடியும், நெருக்கடிகளில் சிக்கி தவிப்பது நாட்டு மக்கள் மட்டுமே.

ராஜபக்சாக்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. அதனை புரிந்துகொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. தாம் செய்த பிழைகளை உணரவும் அவர்கள் தயாராக இல்லை. மாறாக, ஆட்சி பலத்தை அடைவதே அவர்களது தேவை. இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இனியாவது இந்த நாட்டை உண்மையாக கட்டியெழுப்பக்கூடியவர்களை இனம் காண வேண்டும். அவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும். அதே வேளையில் நாட்டை கட்டியெழுப்புவதாயின் அரசாட்சியில் ராஜபக்சாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.”