ஆசிர்வாதத்துடன் ரணில் ஜனாதிபதியானார்

119 0

சுபீட்சமான எதிர்கால கொள்கை அழகானதாக காணப்பட்டாலும், அதில் பல குறைபாடுகள் இருந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜூலை 09ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதத்துடன்; ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

‘ஒன்றிணைந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நாவலப்பிட்டி நகரில்   ஞாயிற்றுக்கிழமை (ஒக் 16) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்கள் மத்தியில் செல்வதையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறுகிய காலத்தில் மக்கள் ஆதரவை வென்று, பலமான ஆட்சியை ஸ்தாபித்தது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து குறைந்தளவான உறுப்பினர்களை கொண்டு 2016ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஸ்தாபித்தோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக தடை ஏற்படுத்தப்பட்டதை  தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதியானவர் என சகல தரப்பினரும் குறிப்பிட்டதை தொடர்ந்து, அவர் 2019ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிமுகப்படுத்திய ‘சுபீட்சமான கொள்கை’ திட்டம் அழகானதாக காணப்பட்டாலும், அதில் பல குறைபாடுகள் காணப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

குறைபாடுகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளாவிட்டால், எதிர்கால சவால்களை வெற்றிகொள்ள முடியாது.

சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும், அது கட்டம் கட்டமாக செயற்படுத்தியிருக்க வேண்டும். விவசாயத்துறையில் ஏற்பட்ட தாக்கம் பொருளாதார ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தி, அரசியல் நெருக்கடியை உண்டாக்கி, எவரும் எதிர்பாராத அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தீர்வு கோரி வீதிக்கு இறங்கினார்கள். இவர்களோடு மக்களாதரவுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினரும் ஒன்றிணைந்தார்கள்.

மே மாதம் முதல் ஏற்பட்ட சவால்களை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முறையாக எதிர்கொண்டிருந்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது.

கடந்த ஜூன் மாதம் 09ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்ட விதத்தையும், அவர் நாட்டை விட்டு வெளியேறியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டு மக்கள் அரசியல்வாதிகளை ஜனநாயக ரீதியில் தெரிவு செய்கிறார்கள். அரசியல்வாதிகள் முறையற்றதாக செயற்பட்டால், அவர்களை ஜனநாயக முறையில் புறக்கணிக்கும் அதிகாரம் நாட்டு மக்களுக்குண்டு.

காலி முகத்திடலில் ஒன்றுகூடி அரசியலை தீர்மானிக்க முடியாது. பலவந்தமான முறையில் எவருக்கும் அரசாங்கத்தை விட்டுக்கொடுக்க முடியாது.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவுசெய்துள்ளோம்.

அரசியல் ரீதியில் தோற்றம் பெற்ற சவால்களை வெற்றிகொண்டு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்றார்.