நாஸ்காம் நிறுவன கூட்டமைப்பின் மாநாடு மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவரும், ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவருமான முகேஷ் அம்பானி மற்றும் முன்னணி இந்திய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளும் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி, “அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்1.பி விசா மீது கட்டுப்பாடுகள் விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. இம்முடிவு இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு வலு சேர்க்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் கூடுதல் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தரும்” எனக் கூறினார். முகேஷ் அம்பானியின் கருத்தை டி.சி.எஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சந்திரசேகரும் ஆமோதித்துப் பேசினார்.
மேலும், இணையதள வசதிகள் இந்தியாவுக்கு தற்போது அடிப்படை தேவையாக இருப்பதாகவும், இந்திய மக்கள் தொகை அதற்கேற்ப இயற்கையாக அமைந்துள்ளதாகவும் அம்பானி தெரிவித்தார். ஆதார் அட்டையில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலமாகதான் ஜியோ இணைப்பை 1 மில்லியன் பேர் இவ்வளவு விரைவில் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

