சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டால், அவரால் முதல்-அமைச்சராக பதவியேற்க முடியாத சூழ்நிலை உருவாகியது.இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று எடப்பாடி பழனிசாமி கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து, தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கிடையே இன்று கவர்னர் மாளிகையில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்து இருந்தார்.
ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து மாலை 4.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது.
இந்த நிலையில், ஆளுநர் உத்தரவுப்படி பெரும்பான்மையை நிரூபிக்க பிப்ரவரி 18ஆம் திகதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று சட்ட சபை செயலர் ஜமாலுதின் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை காலை 11 மணிக்கு சட்டபேரவை கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேரவை கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளார்.
ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்து இருந்த நிலையில் நாளை மறுநாளே சட்டப்பேரவை கூடுவது கவனிக்கத்தக்கது.

