பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு- அமைச்சர் பொன்முடி தகவல்

114 0

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி ஆணையர் அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரை 2 கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்லூரியில் சேர்ந்து உள்ளனர். 13-ந்தேதி நடக்கும் 3-வது கட்ட கலந்தாய்வில் 1.10 லட்சம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த வருடம் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பவியல், எலக்ட்ரானிக் பிரிவில் மாணவர்கள் அதிகளவில் சேருகின்றனர். மைனிங், மெக்கானிக்கல் ஆகிய படிப்புகளில் குறைந்த அளவில் மாணவர்கள் சேர்ந்து இருக்கின்றனர்.

தமிழகம் வந்த மத்திய மந்திரி ஒருவர் கலை அறிவியல் கல்லூரிக்கும் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

மற்றொரு பக்கம் மத்திய அரசு ஒரே மாதிரியான உணவு, தேர்வுமுறை, ஒரே மொழி என்கிற அடிப்படையில் இந்தியை பிற மாநிலங்கள் மீது திணிக்க பார்க்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக கல்வி நிறுவனங்கள் செயல்பட உள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடம் மொத்தம் 2050 உள்ளன. 493 இடங்கள் காலியாக உள்ளன. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தொகுப்பூதியம், அடிப்படையில் 7 ஆண்டு காலம் பணியாற்றி இருந்தால் நேர்முகத் தேர்வில் 30 மதிப்பெண்களில் 15 மதிப் பெண்கள் வழங்கப்படும். அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.