மியான்மரில் சிக்கித்தவித்த 13 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்

173 0

மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உள்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக தமிழக அரசுக்கு தகவல் கிடைத்தது. மியான்மரில் சட்டவிரோதமாக சிறைபிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு உடனே அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்சினை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்கள் 13 பேர் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்கள் 13 பேர் நேற்று இரவு சென்னை வந்தடைந்தனர். அவர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.