வியாபார நடவடிக்கைகளின் போது விளம்பரப்படுத்தல் மற்றும் விலைகளை காட்சிப்படுத்துவது தொடர்பில் கடுமையான சட்ட ங்களை நடைமுறைப்படுத்த நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளதுடன் விளம்பரங்களில் விலை குறிப்பிடப்படாவிட்டால் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரங்களில் பொருட்களின் விலைகள் குறிப்பிடப்படுவது கட்டாயப்படுத்தப்படவுள்ளதுடன், 2011 ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவிருப்பதாக நுகர்வோர் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளொன்றின் உற்பத்தியாளர், விநியோகஸ்தர், முகவர், வர்த்தகர் யாராவது ஒருவர் குறித்த பொருள் பற்றிய விளம்பரமொன்றைச் செய்வதாயின் அதில் விலை குறிப்பிட்டிருக்க வேண்டும் என நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் நாள் வெளியிடப்பட்ட 1687/45 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இது தொட ர்பான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு உற்பத்திப்பொருளிலும் அவற்றின் தகவல்களுடன் சில்லறை விலைகள் குறிப்பிடப்படுவதுடன், விளம்பரங்களிலும் விலைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என இந்த வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இதனைப் பின்பற்றாத வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்தார்.
இந்த சட்டத்தை மீறுவோருக்கு அல்லது நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதிகூடிய தண்டப்பணமாக 100,000 ரூபா அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விற்பனை செய்வது தொடர்பான விளம்பரங்களுக்கு இது பொருத்தமற்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

