தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வரை 37 லட்சம் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

194 0

சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில், ரூ.900 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்திய எண்ணெய் கழகத்தின் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான துணை துறைமுகப் பணிகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை மந்திரி ராமேஸ்வர் தெலி நேற்று பார்வையிட்டார். பின்னர் நெசப்பாக்கத்தில் இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) நிரப்பும் நிலையத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் 20 பெண் பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை மத்திய மந்திரி வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்களின் சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் வகையில் பிரதமரின் உஜ்வாலா திட்டம் கடந்த 2016 ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 31ந் தேதிவரை தமிழ்நாட்டில் சுமார் 37 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன என்றார். மேலும் நடப்பு நிதியாண்டில் 62,06,748 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்க தமிழக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.413.90 கோடி மத்திய அரசால் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.