அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் 6, 7 ஆம் திகதிகளில் விவாதம்

194 0

அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 6மற்றும்7ஆம் திகதிகளில் நடத்துவதற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்காெள்ளப்பட்டதாக  செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன் அடுத்த வாரம் பாராளுமன்ற கூட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் 3 ஆம் திகதி காலை 9,30 மணி முதல் மாலை 4.30 மணிவரை, பல்வேறு காரணங்களினால் தடைப்பட்டிருந்த வாய்மூல விடைக்கான 50 கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு அன்றைய தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 4ஆம் திகதி மூலாேபாய மேம்பாடு அபிவிருத்தி சட்டத்தின் கீழ் விவாதம் இடம்பெற இருப்பதுடன் 5ஆம் திகதி நாடு கடத்தல் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவிப்பின் விதிமுறைகள் தொடர்பான விவாதம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  6மற்றும் 7 ஆகிய இரண்டு தினங்களும்  அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.